தேசிய மட்டத்திற்கு தெரிவாகி மீண்டும் சாதனை படைத்துள்ள பன்சேனை பாரி வித்தியாலய அணி

கிழக்கு மாகாணத்தில், மாகாண மட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலய பெண்கள் அணி சம்பியனாக வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்படும் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளின் உதைபந்தாட்டப் போட்டிகள் நேற்று கல்முனை உவெஸ்லி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன.

குறித்த போட்டிகளின்போது வலய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அணிகள் பங்குபற்றியிருந்தன.மேலும் போட்டியின் இறுதிப் போட்டிக்கு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய பெண்கள் அணியினரும், பன்சேனை பாரி வித்தியாலய பெண்கள் அணியினரும் தெரிவு செய்யப்பட்டனர்.

அம்பிளாந்துறை அணியினரை எதிர்த்தாடிய, பன்சேனை அணியினர் மூன்றுக்கு பூச்சியம் என்ற புள்ளிகளின் வித்தியாசத்தில் சம்பியனானது.

கடந்த வருடமும் பன்சேனை பாரி வித்தியாலய பெண்கள் அணியினர் மாகாண மட்ட உதைபந்தாட்டப்போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு, தேசிய மட்டத்தில் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.