மட்டக்களப்பு அரச அதிபரை கைதுசெய்து விசாரணைசெய்யுமாறு அவரிடமே மனுகொடுத்த மக்கள்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை ஊழலில் இருந்து காப்பாற்ற முனைந்த உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் யாரேன கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இரண்டு பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்தை இரத்துச்செய்வதுடன் அதற்கு காரணமான அரசாங்க அதிபரை கைது செய்து விசாரணை செய்யவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.ஜனாதிபதி மற்றும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பிவைக்கவே இந்த மகஜர் கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு அரச அதிபரை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி அரசாங்க அதிபரிடமே கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மகிந்த அரசாங்கத்தின்; ஊழல் நிர்வாகத்தில் இருந்து இந்த நாடு விடுதலை பெற்றாலும். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இன்றுவரை ஊழல் நிர்வாகத்தின் பிடியில் இருந்து விடுதலை பெறவில்லை.

மட்டக்களப்பு மாவட்டம் தொடர்ந்தும் கடந்த அரசாங்கத்தின் ஊழல்வாதிகளின் பிடியில் சிக்கி தவிக்கின்றது.மிக முக்கியமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள அரசாங்க அதிபர் மற்றும் அங்கு பல வருடங்களாக பணியாற்றிவரும் அரச அதிகாரிகளினால் கடந்த ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஊடகங்கள் வாயிலாக வெளிவந்ததுடன்.

அவை சம்பந்தமாக இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில். அவர்களை கைது செய்து விசாரணை செய்யாது அவர்களை தொடர்ந்தும் இந்த நல்லாட்சி அரசாங்கம் பதவியில் வைத்து அழகு பார்க்கின்றது.



வெள்ளநிவாரண ஊழல், மாட்டு ஊழல், காணி ஊழல்,கணனி ஊழல், தேர்தல் மோசடி, வாகன எர்பொருள் ஊழல் அரசியல் தலைமைகளின் ஏஜென்ட் என பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் அவருடன் இணைந்த ஏனைய சகாக்களையும் தொடர்ந்தும் தங்களது அரசியல் தேவைகளுக்காக வைத்துக்கொண்டு ஊழல் நிறைந்த நிர்வாகத்திற்கு நல்லாட்சி அரசாங்கம் துணைபோகின்றமையானது நல்லாட்சி அரசுக்கு வாக்களித்த மக்களை வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியுள்ளது.



முழுக்க முழுக்க ஊழல் குற்றச்சாட்டு மற்றும் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுவரும் அரசாங்க அதிபர் மற்றும் அவருடன் இணைந்த ஏனைய குற்றவாளிகளை உடனடியாக பதவியில் இருந்து நீக்கி அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய நல்லாட்சி அரசின் தலைவரான அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.



பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்தை இரத்துச் செய்க!

இந்த நாட்டில் சுமார் 336 பிரதேச செயலாளர்கள் உள்ள போதும் செங்கலடி பிரதேச செயலாளர் மற்றும் வாகரை பிரதேச செயலாளர்கள் இருவரின் சேவை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு தேவை என கூறி அவர்களை திடீரென கொழும்புக்கு இடமாற்றம் செய்தமையானது அமைச்சின் மீதான நம்பிக்கையீனத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.



மாவட்டத்தின் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள அரசாங்க அதிபரின் தனிப்பட்ட நடவடிக்கைகளுக்கு அமைய அவசர அவசரமாக இரண்டு பிரதேச செயலாளர்களையும் இடமாற்ற நியமங்களுக்கு அப்பால் முறையற்ற விதத்தில் இடமாற்றம் செய்வதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் உள்ள சில அதிகாரிகள் துணைபோயுள்ளனர். இது நல்லாட்சி அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை இல்லாமல் செய்துள்ளது.



எனவே ஏன் இந்த இரண்டு பிரதேச செயலாளர்களுக்கு மட்டும் அவசர அவசரமாக முறைகேடான இடமாற்றத்தை வழங்கினார்கள். இந்த செயலை புரிந்து மட்டு அரசாங்க அதிபரை ஊழலில் இருந்து காப்பாற்ற முனைந்த உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் யாரேன கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இரண்டு பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்தை இரத்துச்செய்வதுடன் அதற்கு காரணமான அரசாங்க அதிபரை கைது செய்து விசாரணை செய்யவேண்டும் என இத்தால் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.