மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த உத்தியோகத்தர்களும் ஊழல் செய்யவில்லை –குமுறுகின்றனர் அதிகாரிகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகளை சிலர் தெரிவித்துவருவதை கண்டித்து மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி பேரணியாக மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் சென்றது.

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் சில பிரதேச செயலகங்களில் இருந்து சில உத்தியோகத்தர்களும் சில பிரதேசசபையின் செயலாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரச ஊழியர்களின் சுயாதீன சேவை மீதான வெளியாரின் அனாவசிய தலையீட்டினை ஒழிப்போம் என்னும் தலைப்பில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இதன்போது அரசியல்வாதிகளே மக்களை ஏமாற்றாதீர்கள்,காணி அதிகாரம் மாகாணசபைக்கா அதனை வழங்கும் அதிகாரம் அரச அதிபருக்கா?,அரசியல் அழுத்தங்களின் இடமாற்றம் நல்லாட்சிக்கு இழுக்கு போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

அரச உத்தியோகத்தர்கள் தங்களது கடமையினை செய்யவிடாது அவர்களுக்கு உளவியல் ரீதியான தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் சில குழுக்கள் செயற்பட்டுவருவதாக இங்கு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த இடத்திலும் அரச உத்தியோகத்தர் எந்தவித ஊழல்களிலும் ஈடுபடவில்லையெனவும் சிலர் பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டுவருவதாகவும் அரச உத்தியோகத்தர்கள் இங்கு தெரிவித்தனர்.