ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப 457 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு 1700 ஆசிரியர் நியமனங்களை வழங்க முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

 என்று மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இப்புதிய நியமனங்களுக்காக அரசாங்கம் 457 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அனைத்து பாடசாலைகளிலும் உள்ள வெற்றிடங்களை எதிர்வரும் மூன்றாம் தவணை விடுமுறைக்கு முன்னதாக நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 4800 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவற்றை நிரப்புவதற்கான முதற்கட்டமாகவே 1700 பேருக்கு நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஏனைய வெற்றிடங்களுக்கான நியமனங்களை வழங்க எதிர்வரும் 2018ம் ஆண்டுக்கான பாதீட்டின் போது நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கமைய குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு வேலையற்ற பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வெகு விரைவில் கோரப்படவுள்ளன என்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சுட்டிக்காட்டினார்.
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கிழக்கு மாகாண பட்டதாரிகள் கடந்த நான்கு மாதங்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது