களுதாவளையில் 300 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார மத்திய நிலையம்

கிழக்கு மாகாணத்தின் முதலாவது பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (22-07-2017)காலை நடைபெபற்றது.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இந்த பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நடப்பட்டது.

கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் மூன்று பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் திட்டத்தின் கீழ் இரண்டாவது பொருளாதார மத்திய நிலையம் மட்டக்களப்பில் அமையவுள்ளது.

இதற்கென 300மில்லியன் ரூபா நிதியொதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதுடன் இந்த பொருளாதார மத்திய நிலையம் 50 கடைத்தொகுதிகளைக்கொண்டதாக அமைக்கப்படவுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உற்பத்திசெய்யப்படும் பொருட்கள் இங்கு கொண்டுவரப்பட்டு சந்தைப்படுத்தல்கள் செய்யப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தியின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பில் இந்த பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளது.
கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் சிறப்பு அதிதியாகவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாணசபையின் பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,ஞா.கிருஸ்ணபிள்ளை,இரா.துரைரெட்னம் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரேணுக்கா ஏக்கநாயக்க,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விவசாய மாவட்டங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்ப மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் உற்பத்திகளுக்கு இதுவரையில் உரிய சந்தை வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இந்த மத்திய நிலையம் ஊடாக சிறந்த சந்தைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுகின்றது.