துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்க கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் -பூ.பிரசாந்தன்

பெண்கள்,சிறுவர்களுக்கு எதிராக பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுவதுடன் தீர்ப்புக்களும் காலதாமதமாகாமல் விரைவாக வழங்கக்கூடிய வகையில் தனியான நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் திருகோணமலை மூதூர் பெருவெளி பிரதேசத்தில் பாடசாலை சிறுமிகள் மீது நடத்தப்பட்ட பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

பெண்கள் மீதோ சிறுவர் மீதோ எவர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டாலும் அவர் காமுகரே, அவர்களை தமிழர், முஸ்லிம், சிங்களவர், பறங்கியர் என்றோ! அதிகாரி அல்லது அரசியல்வாதிக்கு நெருங்கியவர் எனவோ வேறுபடுத்தி பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டியது பொலிஸாரின் பொறுப்பாகும்.

 அரசியல் இலாபம் தேடும்  சம்பவங்களை மாத்திரம் பெரிதாக்கி நியாயம் தேட முற்படும் சில அரசியல் தலைமைகள் மூதூர் பெருவெளிப்பிரதேசத்தில் நடைபெற்ற பச்சிளம் சிறுமியர் மீதான பாலியல் துஸ்பிரயோகத்தினை மூடி மறைக்க முற்படுகின்றனரோ என்ற ஐயப்பாடு மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் இணக்க ஆட்சி எனக் கூறிக்கொண்டு நிதி நிருவாக காணிப் பகிர்வுகளில் இனவிகிதாசாரம் மறுக்கப்படுவதனை வேடிக்கை பார்க்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியல் தலைமைகள், அபிவிருத்தியையும்,உரிமையையும் இழந்து நிற்கும் தமிழ் சமுகத்தின்  பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் இவ்வாறான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு எதிராக கூட குரல் கொடுக்க முடியாமல் மௌனம் சாதிப்பது ஏன்? பாதிக்கப்பட்ட சிறுமியருக்கு ஆதரவாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய சில அரசியல் தலைமைகள் அசமந்த போக்குடன் கண்டும் காணாமல் இருப்பது மேலும் மேலும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கில் நடைபெறும் பல அரசியல் கேலிக்கூத்துக்களையும் இணக்க அரசியலின் கையாலாகாத தனங்களையும் ஆதாரபூர்வமாக நாம் வெளியிட்டாலும் சில ஊடகங்கள் முன்னுரிமை கொடுக்காதது எமக்கு பெரும் கவலையளிக்கின்றது.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க நல்லாட்சி அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.