மட்டக்களப்பு நீதிமன்ற சிற்றுண்டிச்சாலைக்கு தண்டம் விதிப்பு

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கான சிற்றுண்டிச்சாலையினை நடாத்துபவருக்கு நீதிவான் நீதிமன்றினால் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை பொதுச்சுகாதார பரிசோதகரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் உணவு பரிமாறுபவருக்கு மருத்துவ சான்றிதழ் இல்லாத காரணத்தினால் ஆயிரம் ரூபா தண்டப்பணத்தினை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா விதித்தார்.

நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது குறித்த சிற்றுண்டிச்சாலை சுகாதாரத்திற்கு ஏற்ற முறையில் உணவு வைக்கப்பட்டிருக்காமை மற்றும் உணவு பரிமாறுபவருக்கு மருத்துவ சான்றிதழ் இல்லாமை போன்றவை தொடர்பில் இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த சிற்றுண்டிச்சாலையில் உணவு வைக்கும் பகுதியில் தலைக்கவசங்கள் கையடக்க தொலைபேசிகளும் அடுக்கப்பட்டிருந்ததாகவும் இது பெரும் சுகாதார சீர்கேடு என நீதிமன்றில் பொதுச்சுகாதார பரிசோதகரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை ஆராய்ந்த நீதிபதி குறித்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்ததுடன் ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்தார்.