கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.

(மண்டூர் நிருபர்) கிழக்கு பல்கலைக்கழக பிரதான வாயிற் கதவுக்கு முன்னால் பாரியளவில் வரலாற்றில் இடம் பெறாத வகையில்  இரவு பகலாக சிங்கள மாணவர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமக்கான தீர்வு கிடைக்கும்   வரையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் வகையில் தங்களின் கூடாரங்களை நிலைப்படுத்தி மாணவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு இன்று (07) முதல் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக வாளாகம் முழுவதும் கறுப்பு கொடிகளை கட்டி பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பட்டப்படிப்பை சரியான நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும், பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கமராக்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நான்கு வருட பட்டப்படிப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆறு வருடங்களில் நிறைவடைவதால், இரண்டு ஆண்டுகள் வீணாகவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.
உரிய நேரத்தில பரீட்சைகள் நடைபெற்று பெறுபேறுகள் வெளியிடுவதன் மூலம் நான்கு வருடங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்ய முடியும் என்று மாணவர்கள் சுட்டிக்காட்டினர்.
சிசிரீவி கமராக்கள் மூலம் மாணவர்கள் அவதானிக்கப்படுவதனால் போதுமான சுதந்திரம் இல்லை என்றும், தமது போராட்டத்திற்கு தீர்வு எட்டப்படும்வரை போராட்டம் தொடரும் எனவும் கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.