நகரப்பகுதிகளில் போதைமாத்திரைகள் பல்வேறு வடிவங்களில் மாணவர்களுக்கு விற்கப்படுகின்றது –சமுர்த்தி பணிப்பாளர்

நகரப்பகுதிகளில் போதைமாத்திரைகள் வேறு வடிவங்களில் மாணவர்களுக்கு விற்பனைசெய்யப்படுவதாகவும் அவை மருந்துவிற்பனை நிலையங்களிலும் விற்பனைசெய்யப்படுவதாகவும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரெட்னம் தெரிவித்தார்.

சர்வதேச புகைத்தல்,போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் அனுசரணையுடன் பட்டிப்பளை பிரதேச செயலகமும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடுசெய்த விழிப்புணர்வு நிகழ்வு பட்டிப்பளையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு பட்டிப்பளை சமுர்த்தி அடிப்படை சமூதாய அமைப்பின் விழிப்புணர்வு ஊர்வலத்துடன் ஆரம்பமானது.இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் புகைத்தல் மற்றும் போதைப்பாவனைக்கு எதிராக பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

கொக்கட்டிச்சோலை மற்றும் கடுக்காமுனை ஆகிய பகுதிகளில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம் பட்டிப்பளை பிரதேச செயலகம் வரையில் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி தட்சனகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்றது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரெட்னம் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

இதன்போது போதைப்பாவனையினால் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள்,போதைப்பாவனையினை தடுக்கும் குறைக்கும் வழிவகைகள் உட்பட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

சமுர்த்தி அடிப்படை சமூதாய அமைப்பினர் கிராம மட்டக்கங்களில் விழிப்புணர்வினை ஏற்படுத்தப்படவேண்டும்.இலங்கையில் ஒருநாளைக்கு 60பேர் புகைத்தல்காரணமாக உயிரிழக்கின்றனர்.

பல்வேறு போதைபாவனை காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பது மட்டுமன்றி அதிகளவான நோய்களுக்கும் உள்ளாகும் நிலை காணப்படுகின்றது.கிழக்கு மாகாணத்தில் அதிகளவு மதுபானசாலைகளைக்கொண்ட மாவட்டமாகவும் மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.

எதிர்கால சந்ததியினை இந்த போதையில் இருந்து காப்பாற்றவேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது.நகரங்களில் போதைமாத்திரைகள் வேறு வடிவங்களில் மாணவர்களுக்கு விற்பனைசெய்யப்படுகின்றது. அதனைத்தடுப்பதற்கு பல்வேறுபட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் கூட மருந்துவிற்பனை நிலையங்களில் கூட இவ்வாறான மாத்திரைகள் விற்பனைசெய்யப்படுகின்றன.

இவற்றில் இருந்து பிள்ளைகளை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு பெற்றோரிடமும் சமூத்திடமும் உள்ளது.அதற்கு முன்பாக பெற்றோர் போதை பழக்கவழக்கங்களில் இருந்துவிடுபடவேண்டும்.என்றார்.