மட்டக்களப்பில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு முன்னுதாரணமாக செயற்பட்ட பாடசாலை மாணவர்கள்

உலக சுற்றாடல் தினம் இன்றாகும்.உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

சுற்றாடலை பேணுவதற்கு மக்கள் பின்னடிப்பதன் காரணமாக இயற்கையினால் ஏற்படும் பாதிப்புகள் உலகில் அதிகரித்துவருகின்ற நிலையில் இன்றைய உலக சுற்றாடல் தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

நிலைபேறான வாழ்வுக்கு நிலையான சூழலை இன்றே உருவாக்குவோம் என்னும் தலைப்பில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலய மாணவர்களின் ஏற்பாட்டில் அனைவரையும் கவரும் வகையிலான நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

அண்மைக்காலமாக மக்களின் செயற்பாடுகளினால் மட்டக்களப்பு வாவி அசுத்தமடைந்துவரும் நிலையில் அனைவரையும் அந்த வாவியினை நோக்கி ஈர்க்கும் வகையில் வாவிக்கரையினை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு நகரில் உள்ள புதுப்பாலம் அருகில் இருந்து இந்த வாவிக்கரையினை தூய்மைப்படுத்தும் பணிகளை கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலய சுற்றாடல் படையணி,விஞ்ஞான மன்றம்,சுகாதார கழகம்,விவசாய மன்றம் மாணவர்கள் இணைந்து இந்த தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலய அதிபர் ரி.இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சுற்றாடல் வலய ஆணையாளர் ரி.ஞானசேகரன்,மண்முனை வடக்கு பிரதேச செயலக சுற்றாடல் பிரிவு அதிகாரி திருமதி ஆர்.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சுற்றாடலை பாதுகாக்கவேண்டியதன் அவசியம் தொடர்பிலான துண்டுப்பிரசுரம் ஒன்றும் மாணவர்களினால் பொதுமக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது மட்டக்களப்பு வாவிக்கரையில் வீசப்பட்டிருந்த பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட சூழலுக்கு தீங்குகளை ஏற்படுத்தும் குப்பைகள் மாணவர்களினால் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.