மட்டக்களப்பில் சட்ட விரோதமாக கொண்டுசெல்லப்பட்ட மாடுகள் மீட்பு -இருவர் கைது

மட்டக்களப்பு கல்லடிப்பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகை மாடுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அதனைக்கொண்டுசென்ற வாகனத்தையும் கைப்பற்றியுள்ளதுடன் இரண்டு பேரை கைதுசெய்தும் உள்ளனர்.

இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏறாவூரில் இருந்து காத்தான்குடிக்கு கொண்டுசெல்லப்பட்ட மாடுகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் சுற்றுச்சூழல் விசேட பொலிஸ் பிரிவினரே இந்த மாடுகளை கல்லடி மணிக்கூண்டு கோபுரம் அருகில் வைத்து இன்று காலை கைப்பற்றியுள்ளனர்.

சிறிய வாகனத்தில் எட்டு மாடுகள் மிருகங்கள் கொண்டுசெல்லும் சட்டத்தினை மீறிய வகையில் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் சுற்றுச்சூழல் விசேட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பிரிசோதகர் டபிள்யு.ரணதுங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கர் ஐ.எம்.எஸ்.ஜே.சமன்யட்டவரவின் ஆலோசனையின் பேரில் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் சுற்றுச்சூழல் விசேட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பிரிசோதகர் டபிள்யு.ரணதுங்க தலைமையில் பொலிஸ் சாஜன்ட் தஸாநாயக்க(26895),பொலிஸ் உத்தியோகத்தர்களான செனவிரட்ன(15689), நித்தியானந்தன(7203);,பிரியசாந்த(26654) பொலிஸ் குழுவினர் இவற்றை கைப்பற்றினர்.

இந்த மாடுகளைக்கொண்டுசெல்வதற்கு பிரதேசசபை மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோரின் அனுமதியும் பெறப்பட்டிருக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட மாடுகள்,வாகனம் மற்றும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.