மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு –திடீர் இடமாற்றத்தின் மர்மம் என்ன?

மட்டக்களப்பில் மாவட்ட செயலகத்தில் அமைச்சர்கள் நடாத்தவிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு திடீர் என நிறுத்தப்பட்டு கல்குடாவுக்கு மாற்றப்பட்டதன் காரணத்தினால் ஊடகவியலாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களான வசந்த சேனநாயக்க,நிரோசன் பெரேரா ஆகியோரின் தலைமையில் விசேட கூட்டம் நடைபெற்று அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கும் அழைப்புகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஊடக சந்திப்புக்காக 12.00மணிக்கு ஊடகவியலாளர்கள் சென்றபோது ஊடக சந்திப்பு கல்குடாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக ஊடக அபிவிருத்தி உத்தியோகத்தர் தேவ அதிரனால் ஊடகவியலாளர்களுக்க அறிவிக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பில் இருந்து கல்குடாவில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்புக்காக வான் ஒன்றில் ஊடகவியலாளர்கள் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த ஊடகவியலாளர்கள் அழைத்துச்செல்லப்படவில்லை.

கல்குடாவில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் அமைக்கப்பட்டுவரும் மதுசார உற்பத்தி நிலையம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வழிகளிலும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் இந்த அவசர கூட்டங்களை ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த மதுபானசாலைக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுவரும் ஊடகவியலாளர்கள் இன்றைய ஊடக சந்திப்புக்கு அழைத்துச் செல்லப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.