வழங்கிய கால எல்லை பூர்த்தியாகிவிட்டது –நடவடிக்கைதான் இல்லை –பட்டதாரிகள் கவலை

ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் தமக்கு வழங்கிய கால எல்லைகள் நிறைவடைந்து மூன்று தினங்களை கடந்துள்ளபோதிலும் இதுவரையில் தங்களுக்கான நியமனம் தொடர்பில் எந்தவித உறுதியான பதில்களும் வழங்கப்படவில்லையென மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 82வது நாளை இன்று தொட்டது.

தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி இரவு பகலாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
எந்தவித உறுதியான உறுதிமொழிகளும் இதுவரையில் வழங்கப்படாத நிலையில் தொடர்ச்சியாக தமது போராட்டத்தினை முன்கொண்டுசெல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடியபோது பத்து தினங்களுக்குள் உறுதியான தீர்வினை வழங்குவதாக தெரிவித்திருந்த நிலையில் அந்த காலக்கெடு பூர்த்தியாகி மூன்று தினங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் உறுதியான உத்தரவாதம் எதுவும் இதுவரையில் வழங்கப்படவில்லையெனவும் பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் தமக்கான நியமனம் தொடர்பில் சாதகமான முடிவினை விரைவில் தெரிவிப்பார்கள் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.