நுண்கலை துறை மாணவர்கள் முகாமைத்துவம் சார்ந்த பதவிகளுக்கும் பொருத்தமானவர்கள் - பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்

நுண்கலைதுறை ஒரு முகாமைத்துவத்துடன் தொடர்புபட்ட பாடநெறியாகும். இதனைக்கற்கும் மாணவர்கள் முகாமைத்துவம் சார்ந்த பதவிகளுக்கும் பொருத்தமானவர்கள் என கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க மாணவர்கள் இன்று சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் பணிப்பாளரை சந்தித்து கலந்துரையாடினர்.

நுண்கலை பீட மாணவர்களுக்கு நியமனம் வழங்கமுடியாது,அவர்கள் அரசதுறைகளுக்கு தகுதியற்றவர்கள் போன்ற கருத்துகளை சில அரசியல்வாதிகள் தெரிவித்துவரும் நிலையில் அது தொடர்பில் பட்டதாரிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது தொடர்ந்து கருத்துதெரிவித்த அவர்,
நுண்கலைப் பட்டதாரிகள் ஆசிரியர்களாகவும் கலாசார உத்தியோகத்தர்களாகவும் ஏற்கனவே வேலையை பெற்றிருக்கின்றார்கள். அழகியல் பட்டதாரிகளுக்கான நியமனத்தின் அடிப்படையில் அந்த வேலைகளை அவர்கள் பெற்றிருக்கின்றார்கள்.

சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில நாடகமும் அரங்கியலும்,     கட்புலக்கலைகள், பரதநாட்டியம், கர்நாடகசங்கீதம் ஆகிய நான்கு பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. இந்த நான்கு நுண்கலைப் பாடங்களும் நான்கு வருடங்களில் முழுமையாக செயன்முறை ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் அவர்களுடைய பாடப்பரப்புக்கு அமைந்த வகையில் ஆற்றுகைகளை நிறுகத்திலும் வெளி நிகழ்ச்சிகளிலும் செய்வதனூடாக இப்பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றார்கள்.

அதேநேரம் அவர்கள் ஆங்கிலம், கணணிக்கல்வி, சமஸ்கிருதம் போன்ற அவர்களுடைய துறைக்கு வலுப்படுத்தக்கூடிய பாடங்களிலும் பயிற்றுவிக்கப்படுகின்றார்கள். நான்கு வருடங்கள் முடிவடைந்தபின் அவர்கள் பட்டதாரிகளுக்கு வழங்கப்படுகின்ற எந்தவொரு தொழிற்துறைக்கும் ஏற்றவர்களாக இருக்கின்றார்கள் என்பதற்கமைய பயிற்சிகள் யாவும் செயன்முறை ரீதியாகவும் சமூகமயப்படுத்தப்பட்டதாகவும் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே இப்பட்டதாரிகள் எப்பொழுதும் சமூகத்துடனும் கொள்கைகளிலும் வேலை செய்யக்கூடிய ஆற்றலையும் அறிவையும் அனுபவத்தையும் தங்களது பாடப்பரப்பினூடாக பெற்றுக்கொள்கின்றார்கள்.

அழகியல் கற்கைகள் என்ற பெயரில் பாடசாலைகளில் காணப்படுகின்ற இசை,நடனம், நாடகமும் அரங்கியலும், சித்திரம் ஆகிய பாடங்கள் நுண்கலைகள் என்ற பெயரில் பல்கலைக்கழகத்தில் கற்கின்ற பாடத்தின் அம்சங்களில் இரண்டும் வேறுவேறு அல்ல.இந்த நிறுவகம் அழகில் கற்கைகள் நிறுவகம் என்ற பெயரில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றது.

அழகியல் என்பதும் நுண்கலை என்பதும் இங்கு வேறுவேறானதல்ல. நுண்கலைப்பாடங்களின் அடிப்படையான அம்சமே அழகியலாகும்.பாடசாலைகளிலும் பல்கலைக்கழகத்திலும் இருவேறு பெயர்களில் கற்பிக்கப்பட்டாலும் அவையொன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாகும்.

அழகியல் பாடங்களுக்குரிய வெற்றிடங்கள்,நான்கு வருடம் சிறப்பான கற்கைகளை மேற்கொண்ட நுண்கலை பட்டதாரிகளுக்கு பொருத்தமானதாகும்.

நாடகமும் அரங்கியலும் என்னும் வரும்போது பாடசாலைகளில் ஆறாம் தரத்தில் இருந்து உயர்தரம் வரையில் பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்றது.இவர்களுக்கு சிறப்பான கற்பித்தலைசெய்யக்கூடியவர்கள் நுண்கலை துறையில் நான்கு வருடம் முழுமையான பயிற்சிகளைப்பெற்ற பட்டதாரிகளாகும்.

அவர்கள் கிழக்கு பல்கலைக்கழக நுண்கலை துறையிலும் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்திலும் இருந்தும் பட்டதாரிகளாக உருவாகின்றார்கள்.

நாடகமும் அரங்கியலும் என்பது அடிப்படையில் செயன்முறையுடனும் ஆற்றுகையினையும் கொண்ட பாடநெறியாகும்.இந்த பாடநெறியை கற்பிக்கும் அடிப்படை தகுதியானது இந்த செயன்முறை பயிற்சியுடன் ஆற்றுகை தகுதியினையும் கொண்ட பட்டதாரிகளுக்கே உள்ளது.

சில பாடசாலைகளில் நாடகமும் அரங்கியலும் கற்க விரும்பும் மாணவர்களுக்கு அந்த சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.அதேபோன்று சிலபாடசாலைகளில் நாடகமும் அரங்கியலும் சிறப்பு தேர்ச்சி பெற்றுக்கொள்ளாதவர்களும் அவற்றினை கற்பிக்கும் செயற்பாடு இடம்பெற்றுவருகின்றது.

சில இடங்களில் நாடகமும் அரங்கியலுக்குமான ஆசிரிய தேவையிருந்தும் அவை உருவாக்கப்படாமல் இருப்பது என்பது தொடர்பில் நாங்கள் சிந்திக்கவேண்டும்.

எமது சமூகம் கலாசார சீரழிவுக்குள் சிக்கியுள்ளது.அதற்குள் இருந்து சமூகத்தினை மீட்டெடுக்கவேண்டும் என்று சிலர் பொதுமேடைகளில் கூறினாலும் கூட அதனை கவனத்தில்கொண்டு அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் நாங்கள் சிந்திக்க தயாராக இல்லையென்பதையே நுண்கலை பட்டதாரிகள் சார்ந்த வேலைவாய்ப்பு பிரச்சினை காணப்படுகின்றது.

உரிய இடங்களுக்கு உரியவர்களை நியமிப்பதன் மூலம் சமூக பண்பாட்டு விழுமியங்களை ஆக்கபூர்வமாக முன்னெடுப்பதற்கு பங்களிப்பு செய்வதாக இருக்கும்.பட்டதாரிகள் வேலையற்ற நிலையில் இருப்பது நாட்டுக்கும் சிக்கலான விடயமாகும்.அவர்களை உருவாக்கும் நிறுவனங்களும் அது தொடர்பில் சிந்திக்கவேண்டிய நிலையுள்ளது.

அதேபோன்று நாடுபூராகவும் உள்ள தொல்பொருள் காட்சியகங்கள், ஆவனகாப்பகங்களின் தொழில்வாய்ப்புகளை பெறக்கூடியவர்களாக நுண்கலையின் கட்புலதுறை மாணவர்கள் சிறப்பு பயிற்சிபெற்றவர்களாக உள்ளனர்.ஊடகத்துறையின் பல்வேறு பகுதிகளிலும் கடமையாற்றும் ஆற்றல்கொண்டவர்களாகவும் இந்த நுண்கலை பட்டதாரிக்ள உருவாக்கப்படுகின்றார்கள்.

நுண்கலைத்துறை பட்டதாரிகள் இன்று பல அரச நிறுவனங்களில் உயர்பதவிகளில் உள்ளனர்.நுண்கலைதுறையில் நாடகமும் அரங்கியலும் பாடநெறியானது ஒரு முகாமைத்துவத்துடன் தொடர்புபட்ட பாடநெறியாகும்.இதனைக்கற்கும் மாணவர்கள் முகாமைத்துவம் சார்ந்த பதவிகளுக்கு பொருத்தமானவர்கள்.