பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் மஹாகும்பாபிசேக நிகழ்வு –பெருமளவான பக்தர்கள் பங்கேற்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுசிறப்புமிக்க பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் மஹாகும்பாபிசேகம் இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மஹாகும்பாபிசேகத்தினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கிரியைகள் ஆரம்பமாகியுள்ளதுடன்  இன்று சனிக்கிழமை(27) காலை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை மாலை வரையில் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இன்று திங்கட்கிழமை காலை 8.00மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகி 10.45மணி தொடக்கம் 12.16மணி வரையிலான சுபவேளையில் கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் இராஜகோபுரம் உட்பட ஆலயத்தின் பரிபால மூர்த்திகள்,மூலஸ்தானம்,இரண்டு மணிக்கோபுரங்கள் இதன்போது கும்பாபிசெகம் செய்யப்பட்டது.

நவகுண்ட யாகங்கள் நடைபெற்று கும்பங்களுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று அந்தணர்கள்,பக்த அடியார்கள் புடைசூழ வேதநாதகீத ஓசைகளுடன் கருடன் வலம் வர கும்பாபிசேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

தெல்லப்பளை ஸ்ரீதுர்க்காதேவி வேதாகம பாடசாலையின் அதிபர் பிரதிர்ஷடா சக்கரவர்த்தி பிரதிஷ்டா சிரோண்மணி பிரம்மஸ்ரீ சுந்தர செந்தில்ராஜ சிவாச்சாரியார் தலைமையில் கிரியைகள் நடைபெற்றது.

இதன்போது பிரதம சிவாச்சாரியார் ஆலய நிர்வாகத்தினரினால் கௌரவிக்கப்பட்டதுடன் சிவாச்சாரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

கும்பாபிசேகத்தினை தொடர்ந்து ஆலயத்தின் முன்னாள் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் ஆலய கட்டிடப்பணி செய்தவர்களும் வாத்தியக்கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.