வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் உட்பட மூவர் பிணையில் விடுவிப்பு

கிழக்கு மாகாணசபை முற்றுகையின்போது நீதிமன்ற கட்டளை அவமதிக்கப்பட்டதாக கூறி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் உட்பட மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி கிழக்கு மாகாணசபையினை கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தியிருந்தனர்.

இதன்போது குறித்த போராட்டம் தொடர்பில் நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளையினை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கிழித்து அவமதித்தது தொடர்பில் மே மாதம் முதலாம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 23ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றில் ஆஜராகுமாறு அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்க ஏற்பாட்டாளர் தென்னே ஞானரத்ன தேரர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் உட்பட நான்கு பேருக்கு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நான்கு பேரும் ஆஜராகிய நிலையில் நான்கு பேரையும் இன்று திங்கட்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.கே.சுமந்திரன்,கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சரும் சட்டத்தரணியுமான கி.துரைராஜசிங்கம்,வடமாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கே.சயந்தன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் உட்பட மூன்று பேர் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்க ஏற்பாட்டாளர் தென்னே ஞானரத்ன தேரர் வேறு ஒரு வழக்கின் பிடியாணையுள்ளதால் தொடர்ந்து விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.