வெசாக் தினம் அனுஸ்டிக்கும்போது கற்ற சமூகம் வீதியில் -கவனத்தில் கொள்ளுமா அரசு

ஐ.நா.வின் வெசாக் தினம் இலங்கையில் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் கற்ற சமூகம் வடகிழக்கில் வீதியில் கிடந்துபோராடுவது கவலைக்குரியது என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்தது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பாட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரகம் 78வது நாளாகவும் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.

தொழில் உரிமை கோரிய போராட்டம் தொடர்பில் உரிய நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டுள்ள போதிலும் தமக்கான உறுதிமொழிகள் உரியவர்களிடம் இருந்துகிடைக்கவில்லையெனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துவருவதாகவும் உறுதியான கருத்துகள் அரசின் முக்கிய பகுதிகளில் இருந்து வழங்கப்படவில்லையெனவும் வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவது தொடர்பில் ஆளணி அனுமதி கிடைத்துள்ளபோதிலும்இதுவரையில் நிதி தொடர்பான அனுமதி கிடைக்காமல் உள்ளமை கவலைக்குரியது எனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் பட்டதாரிகள் நியமனங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் ஆண்டுகளின் அடிப்படையில் அனைத்து பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவேண்டும் எனவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் அரசாங்கம் வெசாக் தினத்தை அனுஸ்டிக்கவுள்ள நிலையில் கற்ற சமூகம் வீதியில் போராடுவது வேதனைக்குரியது எனவும் விரைவில் பட்டதாரிகளுக்கு நல்ல தீர்வினை எதிர்பார்ப்பதாகவும் வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.