நுண்கலை பட்டதாரிகளுக்கான வெற்றிடங்கள் உருவாக்கப்படவேண்டும்-பேராசிரியர் சி.மௌனகுரு

நுண்கலை பட்டதாரிகளுக்கான வெற்றிடங்கள் இருக்கா,இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது.ஆனால் அவற்றினை உருவாக்கவேண்டியது அரசின் கடமையாகும் என கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் நுண்கலை பீட தலைவரும் ஆய்வு அரங்கத்தின் தலைவருமான பேராசிரியர் சி.மௌனகுரு தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்தில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தில் உள்ள நுண்கலை பட்டதாரிகள் பேராசிரியை சந்தித்து கலந்துரையாடினர்.

அண்மைக்காலமாக நுண்கரைதுறை தொடர்பில் அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துவரும் நிலையில் அது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இன்றைய சந்திப்பு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்த்,உபதலைவர் சி.சிவகாந்தன் உட்பட நுண்கலைதுறை பட்டதாரிகளும் கலநதுகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பேராசிரியர்,
வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் மிக முக்கியபோராட்டமாக வெளிக்கிளம்பியுள்ளது.இலங்கையில் உள்ள பல்வேறு முக்கிய பிரச்சினைகளுல் ஒன்றாக பட்டதாரிகளின் பிரச்சினையும் வெளிக்கிளம்பியுள்ளது.

இந்த போராட்டம் எமது கல்வித்திட்டத்திற்கும் எமது பொருளாதார திட்டத்திற்கும் இடையில் ஒரு இணைப்பு இல்லை என்பதையே காட்டுகின்றது.இரண்டுமே திட்டமிடப்படாமல் காலம்காலமாக நடைபெற்ற நிலையிலேயே இவ்வாறான போராட்டங்கள் ஏற்பட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளில் நுண்கலை தவிர்ந்த ஏனைய பிரிவுகள் தொடர்பில் அனைவருக்கும் தெரியும் அது தொடர்பில் பாடசாலைகளிலும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறுகின்றன.ஆனால் நுண்கலை பட்டதாரிகள் தொடர்பிலான தெளிவு பொதுமக்களுக்கும் தெரியாது,அரசியல்வாதிகளுக்கும் தெரியாது,கல்வி அதிகாரிகளுக்கு கூட தெரியாது என்பதுதான் கவலைக்குரிய விடயம்.

நுண்கலைக்கு பாடசாலைகளிலும் அதிகமான மதிப்பு இருப்பதில்லை, பல்கலைக்கழகத்தில் கூட அதிகமான மதிப்பு இருப்பதில்லை.வடகிழக்கில் இராமநாதன் நுண்கலை கல்லூரியும் விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகமும் நுண்கலையின் உயர் பீடங்களாக கருதப்படுகின்றது.அதற்கான பாடத்திட்டங்கள் வழங்கப்பட்டு,அரசாங்க அனுமதி வழங்கி பட்டதாரிகள் வெளியேறிவருகின்றனர்.

விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தில் இருந்து ஆண்டு தோறும் குறைந்தது 200மாணவர்கள் பட்டம்பெற்றுசெல்கின்றனர்.நுண்கலை துறையில் பயிற்சிபெற்றே செல்கின்றனர்.நான்கு வகை பாடநெறிகள் ஊடாக இந்த மாணவர்கள் வெளியேறிச்செல்கின்றனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுண்கலை பட்டதாரிகள் வெளியேறியுள்ளனர்.இந்த மாணவர்களை எவ்வாறு வழிநடத்துவது அவர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பிலான திட்டங்கள் சமூகத்திடமும் இல்லை,அரசியல்வாதிகளிடமும் இல்லை.இதுவொரு கவலைக்குரிய விடயமாகும்.
அண்மையில் கல்வி இராஜாங்க அமைச்சர் நுண்கலை பட்டதாரிகளுக்கான வெற்றிடங்கள் இல்லை, நுண்கலை பட்டதாரிகள் திறமை குறைந்தவர்கள் என நுண்கலை பட்டதாரிகள் தொடர்பில் கருத்து வெளியிட்தாக தெரிவிக்கப்படும் நிலையில் அது தொடர்பில் நான் பார்க்காவிட்டாலும் குறித்த கருத்து தொடர்பில் அறிந்துகொண்டேன்.இதனை சாதாரண நபர்கள் கூறியிருந்தால் அதனை கவனத்தில்கொள்ளவேண்டியதில்லை.ஆனால் விடயம் தெரிந்த அமைச்சர் ஒருவர் கூறியிருப்பதன் காரணமாக அதனை புறந்தள்ளமுடியாது.

நுண்கலை பட்டதாரிகளுக்கான வெற்றிடங்கள் இருக்கா,இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது.ஆனால் அவற்றினை உருவாக்கவேண்டியது அரசின் கடமையாகும்.அதனை உருவாக்கவேண்டியது கல்வி அதிகாரிகளினது கடமையாகும்.அவர்களுக்கான எதிர்காலத்தினை உருவாக்கிக்கொடுக்கவேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது.அவர்களை எழுந்தமானமாக தூக்கியெறிந்துவிடமுடியாது.

நுண்கலை பட்டதாரிகளின் திறமை தொடர்பிலான சந்தேகம் கடுமையான மனவருத்ததை ஏற்படுத்தியுள்ளது. நுண்கலை பட்டதாரிகள் நான்கு வருடமாக கடுமையான பயிற்சிகளைப்பெறுகின்றனர்.முக்கியமாக நாடகமும் அரங்கியலும் மாணவர்கள் கடுமையான பயிற்சிகளை பெறுகின்றனர்.

நாடகமும் அரங்கியலும் ஐம்பதுக்கு மேற்பட்ட திறன்களை வளர்க்கின்ற துறையாகும்.இத்தகைய திறமையினை ஆளுமையினை வளர்க்கவேண்டும் என்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்தினை பாடசாலைகளில் ஆறாம் தரம் தொடக்கம் உயர்தரம் வரையில் அனுமதித்தார்.

நாடகமும் அரங்கியலும் பாடநெறி பல ஆளுமையினை வளர்க்கின்றது. ஆளுமைமிக்கவர்களான அந்த மாணவர்கள் உருவாக்கப்படுகின்றனர்.குறித்த பாடநெறியினை முழுமையாக கற்காத ஓரிரு மாணவர்களைத்தவிர பெரும்பாலான மாணவர்கள் திரன்வாய்ந்தவர்களாக வெளியேறுகின்றனர்.

இந்த திறன்களை நாங்கள் விணடிக்கப்போகின்றோமா?அல்லது அதனை சமூகத்திற்கு பயன்படுத்தப்போகின்றோமா?.சமூகம் அவர்களை பயன்படுத்தவேண்டும்.அமைச்சரும் அவர் சார்ந்த அரசாங்கமும் மிகமுக்கிய கவனம் எடுக்கவேண்டும்.அவர்களின் நியாயமான கோரிக்கையினை ஏற்கவேண்டும்.