தொழிலாளர் தினத்தை கறுப்பு தினமாக அனுஸ்டிக்கும் வேலையற்ற பட்டதாரிகள்

தொழிலாளர்கள் தமது உரிமைக்காக குரல் கொடுக்கும் நாளில் தாங்கள் தொழில் உரிமைக்காக வீதியில் போராடிவருவதனால் இன்றைய நாளை கறுப்பு நாளாக அனுஸ்டிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டவேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்று திங்கட்கிழமையுடன் 70நாட்களை கடந்துள்ள நிலையில் இன்றும் தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை தொடர்ந்துவருகின்றனர்.

ஒரு எதிர்பார்ப்புடன் பட்டங்களை பூர்த்திசெய்த தாங்கள் இன்று வீதியிலேயே வாழ்க்கையினை நடாத்தும் நிலையேற்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் தமக்கான வேலைவாய்ப்பினை வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுவருவதாக பல்வேறு கருத்துகள் வெளிவருகின்றபோதிலும் அரசாங்க தரப்பிலோ மாகாணசபை தரப்பிலோ தமக்கான உறுதியான பதில்கள் இதுவபரையில் வழங்கப்படவில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமக்கான உறுதியான பதில்கள் எழுத்துமூலம் வழங்கப்படும்போது தமது போராட்டத்தினை கைவிடுவது தொடர்பில் சிந்திப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களிடம் தமது பிரச்சினைகள் தொடர்பில் முன்வைத்துள்ளதாகவும் தமக்கான தீர்வினை பெற்றுத்தர அழுத்தங்களை அவர் வழங்குவார் என தாங்கள் நம்புவதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.