அமரர் சிவராம் உயிரோடு இன்றிருந்திருந்தால் புதிய அரசியல் சீர்திருத்த வரைபில் மிக முக்கியமான வகிபங்கை வகித்திருப்பார்.

(சசி துறையூர்) அமரர் சிவராம் உயிரோடு இன்றிருந்திருந்தால்  புதிய அரசியல் சீர்திருத்த வரைபில் மிக முக்கியமான வகிபங்கை வகித்திருப்பார்.


சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் சிவராமின் 12வது நினைவு நாள் நிகழ்வு  கடந்த 29.04.2017 சனிக்கிழமை மட்டக்களப்பு ஊறணி அமெரிக்க மிஷன் தேவாலய மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர்
வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

 இந் நிகழ்வில் அரசியல் வாதிகள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

ஊடகவியலாளர் அமரர் தர்மரெட்ணம் சிவாரம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு பண்ணிரெண்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மெளன அஞ்லியும் செலுத்தப்பட்டது.

மேற்படி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய இரா சம்பந்தன் அவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன் விசேட உரையும் நிகழ்த்தினார்.


படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தாரக்கி சிவராமுடன் நான் பழகும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, ஆனால் அவரையும் அவரது எழுத்துக்களையும் நன்கறிவேன். தமிழ் மக்களுக்கான அவரது அர்ப்பணிப்பு மிக்க எழுத்துக்களே அவரை அவரது இழப்புக்கு காரணமாக்கிற்று.

சிவராம் சிறந்த சிந்தனா சக்தி உடையவர் அவர் உயிரோடு இன்றிருந்திருந்தால் நாங்கள் இன்று வரைந்து கொண்டீருக்கும் புதிய அரசியல் சீர் திருத்த வரைபில் முக்கியமான வகிபங்கினை கொண்டிருந்திருப்பார்.
அவரது படுகொலைக்கு நீதிநியாயமான விசாரணை வேண்டும். என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய இரா சம்பந்தன் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் மாவை.சேனாதிராஜா, கி.துரைராஜாசிங்கம், எம்.ஏ.சுமந்திரன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள், ஊடக நண்பர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், என பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மாமனிதர் சிவராமின் ஊடகப்பணி தொடர்பாகவும், அரசியல் சார்ந்த விடயம் தொடர்பான  சிவராம் ஞாபகார்த்த உரையினை ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளரும் அமரர் சிவராமின் நண்பருமான கலாநிதி ரவிச்சந்திரா நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் கடந்த காலத்தில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் கொலை தொடர்பில் முறையான நீதி விசாரணை நடாத்தப்படவேண்டும் என்ற வேண்டுகோளை அரசுக்கு விடுக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரினால் முன்வைக்கப்பட்டது.