இன்று முடிவுவரும் நாளை முடிவுவரும் என்ற எதிர்பார்ப்புடன் பட்டதாரிகள் 84 நாட்களை கடந்து

இன்று முடிவுவரும் நாளை முடிவுவரும் என்ற பெரும் எதிர்பார்ப்புடனேயே தினமும் போராட்ட இடத்திற்கு வந்து செல்வதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 84 நாளாகவும் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் பட்டம்பெற்ற 1500 பட்டதாரிகள் வேலைவாய்ப்பற்ற நிலையில் இருப்பதாகவும் இவர்களின் 80வீதமானவர்கள் பெண்கள் எனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமும் வேலையில்லாத காரணத்தினால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

போராட்டத்திற்கு வந்து செல்லும்போது குடும்பத்திலும் வெளியிலும் பல்வேறு பிரச்சினைகளை தாங்கள் எதிர்நோக்கிவருவதாகவும் தமக்கான நியமனங்களை விரைவில் வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசாங்கம் தமது நிலைமை தொடர்பில் கவலையீனமாக இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பட்டதாரிகள் ஆளணி அனுமதி கிடைத்தும் இதுவரையில் திரைசேரி அனுமதி வழங்கப்படாதது ஏன் என்றும் பட்டதாரிகள் கேள்வியெழுப்புகின்றனர்.