வீதியில் மருத்துநீர் தேய்த்து புதுவருட கொண்டாட்டத்திற்கு சவால் விடுத்த பட்டதாரிகள்

பிறந்துள்ள சித்திரைப்புத்தாண்டில் தாங்கள் அரசியல்வாதிகளினால் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவித்து புதுமையான முறையில் வீதியில் தமது புதுவருட கொண்;டாட்டத்தினை துக்கதினமாக அனுஸ்டித்தனர்.

கடந்த 53வது நாளாகவும் தமது தொழில் உரிமையினை உறுதிப்படுத்த மத்திய மாகாண அரசாங்கங்கள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்றபட்டதாரிகள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த சத்தியாக்கிரக போராட்டத்தினை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றனர்.

இதன் கீழ் இன்று சித்திரைபுத்தாண்டு தினத்தன்று காலை வீதியில் மருத்து நீர் தேய்த்து குளித்து தமது போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் அரசியல்வாதிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும்போராட்டத்தினையும் முன்னெடுத்தனர்.

இன்றைய தினம் கறுப்பு உடையணிந்துவந்து போராட்டத்தில் கலந்துகொண்ட  பட்டதாரிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

வாக்களித்த மக்கள் வீதியில் போராடிக்கொண்டிருக்கும்போது அரசியல்வாதிகள் தமது வீடுகளில் சந்தோசமாக புத்தாண்டை கொண்டாடிவருவதாகவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.