மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கான நல்ல தருணம் இது.

(சசி துறையூர்) மட்டக்களப்பு மாவட்டத்தின் பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதேச மட்ட விளையாட்டு போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வயதுப்பிரிவு அடிப்படையில் ஆண் பெண் இருபாலாருக்குமான அனைத்து வகையான மெய்வல்லுனர் மற்றும் கபடி,கிறிக்கட்,எல்லே,உதைப்பந்து, கூடைப்பந்து,கரம்,கயிறுழுத்தல்,வலைப்பந்து, போன்ற குழுநிலை போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. பிரதேசத்துக்கு பொறுப்பான இளைஞர் சேவை அதிகாரிகளின் நெறிப்படுத்தலில் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இம்முறை பிரதேச  விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுமென  மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் எஸ்.திவ்வியநாதன் எமது செய்தி பிரிவுக்கு தகவல் தெரிவித்தார்.

பிரதேச மட்ட போட்டிகள் நடைபெறும் சம காலத்தில் மாவட்ட குழுநிலை போட்டிகளும் நடைபெறும். எனவே பிரதேச ரீதியிலான போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள் தாயார்நிலையில் இருக்குமாறு வேண்டுகிறேன்.

விளையாட்டு என்பது பொழுது போக்குக்கான அம்சம் மாத்திரமன்று, அது உடல் உள ஆரோக்கியத்திற்கானது. விளையாட்டின் ஊடாக உடல் ஆரோக்கியத்தை மாத்திரம் அல்ல நல்ல தனிமனித விழுமியங்களையும் சமூக வாழ்வியலையும் கட்டியெழுப்பமுடியும்.

திறமை என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்க முடியாதுதான் ஆனால் திறமையை வளர்த்துக்கொள்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் சம வாய்ப்புக்களும் சூழலும் எப்போதும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் எமது இளைஞர்களுக்கு தாராளமாக கிடைக்கின்றது.

இளைஞர்களின் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்த கிடைக்கின்ற சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும். குறிப்பாக படுவான்கரை  பிரதேசங்களில் நல்ல திறமையான வீரர்கள் இலை மறை காய்களாக ஒழிந்துள்ளனர், அவர்களின் திறமைகள் வெளிக்கொணரப்படவேண்டும். அதற்கு எமது இளைஞர் சேவை அதிகாரிகளுடன் இளைஞர் கழகங்களின் நிருவாகிகள் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன நிருவாகிகள்ஒத்துழைப்பு நல்குவார்கள் என நம்புகிறேன்.

 13-29 வயதிற்குட்பட்ட இளைஞர் யுவதிகள் 13-20 மற்றும் 21-29 வயதுக்குழுக்களாக போட்டிகளில் பங்குபற்ற முடியும்.

பிரதேச மட்ட போட்டிகளில் வெற்றிபெறும் வீர வீராங்கனைகள் மாவட்ட மட்ட போட்டிகளில் பங்குபற்ற முடிவதோடு வெற்றிபெறும் வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணம் சான்றிதழ்கள் வழங்கப்படும். இம்முறை பிரமாண்டமான முறையில் நடைபெறும் 29வது தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியிலும் பங்குபற்றுதலுக்கான வாய்ப்புக்களை பெறமுடியும்.

இளைஞர் விளையாட்டுக்களில் வெற்றிபெறும் வீரர்களுக்கு தேசிய விளையாட்டு குழுமங்களில் இணைந்து கொள்வதற்க்காகவும் சர்வதேச ரீதீயிலான போட்டிகளில் பங்குபற்றுவதற்கான அரிய வாய்ப்பினையும் பெற்றுக்கொள்ளமுடியும். என அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய ரீதியில் கடந்த காலங்களில் எமது மாவட்டம் குறிப்பிடும் படியாக பெறுபேறுகள் எதனையும் பெறவில்லை. எனவே மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகள்  அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் பங்குபற்றி பிரதேசம் மாவட்டம் தேசியம் வரை சென்று வெற்றிகள் பெற்று எமது மாவட்டத்துக்கு  பெருமை சேர்க்க இறைவனை பிரார்த்திப்பதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டார்.