சவூதியில் இருந்து நாடு திரும்ப இருந்தவர் மரணம்

இலங்கைக்கு திரும்பவிருந்த நிலையில் சவுதி அரேபியாவில் வீட்டுச் சாரதியாக பணியாற்றிவந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 17ம் திகதி மூச்சு திணறல் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி 3, கிராமசேவகர் பிரிவு, முருகன் கோயில் வீதியிலுள்ள பிள்ளையான் சந்திரகுமார் (வயது 37) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சவுதி அரேபியாவில் ரியாத் எனும் இடத்திற்கு கடந்த 2016.07.03ம் திகதி வீட்டுச் சாரதியாக வெளிநாடு சென்றதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் உறவினர்கள் தெரிவித்தாவது,

உயிரிழந்த பிள்ளையான் சந்திரகுமார் வீட்டுச் சாரதியாக சென்றுள்ளார். வீடு ஒன்றிலுள்ள குடும்பங்களை நாளாந்த வழமையான போக்குவரத்தில் தனது சேவையை செய்து கொண்டுவந்துள்ளார்.

கடந்த 17ம் திகி தனது சாரதி சேவையை செய்து விட்டு நித்திரையில் இருந்தவேளையில் அன்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருந்தமையினால் உறக்கத்தில் இருந்தவாறு உயிரிழந்து இருக்கலாம் என சவுதியிலுள்ள சக நண்பர் ஒருவர் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்தவரின் வீட்டு உரிமையாளர் சம்பவம் இடம்பெற்ற அன்று அந் நாட்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தியதும், உடன் வைத்தியசாலைக்கு உடலை கொண்டு சென்று பரிசோதிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

உயிரிழந்தவர் எதிர்வரும் 19.05.2017 அன்று தனது வேலையை முடித்துவிட்டு இலங்கைக்கு திரும்புவதற்குரிய விசா மற்றும் அனைத்துவித ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் கடந்த 17ம் திகதி உயிரிழந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் உடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்குரிய அனைத்துவித ஏற்பாடுகளையும் உறவினர்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.