மட்டக்களப்பில்; பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி நிறுத்தம்

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி, புதன்கிழமை தொடக்கம் கடமையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக, மாவட்ட பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கன்னங்குடா சந்தியில், கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில், அப்பகுதியில் பொலிஸார்  எவரும் பாதுகாப்புக் கடமையில் அங்கு இருந்திருக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி, பதவி இடைநிறுத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நேற்றைய தினம், வவுணதீவு பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி, தனது நிர்வாகத்துக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பொலிஸாரைக் கடமைக்கு அமர்த்தியிருந்ததாகவும் ஆனால், குறித்த விபத்து இடம்பெற்ற கன்னங்குடா சந்தியில் கடமைக்கு அனுப்பப்பட்டிருந்த பொலிஸார், அங்கு கடமைக்குச் செல்லத் தவறிவிட்டனர் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

புத்தாண்டு உட்பட விசேட வைபவங்கள் மற்றும் நிகழ்வுகள் இடம்பெறும்போது, அந்தச் சந்தர்ப்பங்களில் பொலிஸார் விசேட பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென்பது பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையாகும்.