மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் நினைவேந்தல் நிகழ்வு

அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் காந்தி பூங்கா முன்பாக நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்பட்டது.

இதன்போது அன்னை பூபதியின் படத்திற்கு மலரஞ்சலி செய்யப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

கடந்த 58நாட்களாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சாத்வீக போராட்டம் மூலம் அகிம்சையினை உலகுக்கு வெளிப்படுத்திய அன்னை பூபதியின் நினைவு தினத்தை அமைதியான முறையில் சாத்வீக ரீதியில் அனுஸ்டித்தனர்.

இதன்போது பட்டதாரிகளினால் தாக சாந்தி நிகழ்வும் நடாத்தப்பட்டதுடன் அன்னை பூபதி தொடர்பான உரையும் நிகழ்த்தப்பட்டது.

அன்னை பூபதியின் வழியில் தமது சாத்வீக போராட்டத்தினை தாங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.