60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியத்தை வலியுறுத்திய சைக்கிள் பயணம் மட்டக்களப்பை வந்தடைந்தது

இலங்கையில் வாழும் அனைத்து 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் போதுமான அளவு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டுவரும் தனது பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு வவுனியாவை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் தெரிவித்தார்.

இலங்கையில் வாழும் அனைத்து 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் போதுமான அளவு ஓய்வூதியம் வழங்குமாறு கோரி வவுனியாவை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் மேற்கொண்ட சைக்கிள் சாதனைப்பயணம் மட்டக்களப்பினை வந்தடைந்தது.

கடந்த ஒன்பது தினங்களாக மேற்கொண்டுவரும் குறித்த பயணமானது கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பித்து நேற்று அம்பாறை மாவட்டத்தினை வந்தடைந்ததுடன் இன்று காலை மட்டக்களப்பினை வந்தடைந்தது.

மட்டக்களப்பு நகரை வந்தடைந்த தர்மலிங்கம் பிரதாபனுக்கு மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக வரவேற்பளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு தமிழ் சங்க பிரதிநிதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,சமூக ஆர்வலர்கள் அவருக்கு வரவேற்பளித்ததுடன் அவரின் சாதனைப்பயணத்திற்கு தமது ஆதரவினையும் தெரிவித்தனர்.

சுகல முதியவர்களும் சுயகௌரவத்துடனும் நிம்மதியுடனும் வாழவேண்டும் என்பதற்காக தர்மலிங்கம் பிரதாபன் மேற்கொண்டுவரும் பயணத்தை கௌரவித்து அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம் செய்யப்பட்டது.

இதனையொட்டி 1515 கிலோமீற்றர் தூரங்களை கடக்கும் வகையில் இந்த சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.