மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சத்தியப்பிரமாணம்,கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - 40வது நாளில்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று பிற்பகல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததுடன் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்விலும் ஈடுபட்டனர்.

கடந்த 40தினங்களாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக தமக்கான நியமனங்களை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி சத்தியாக்கிரக போராட்டத்தில் பட்டதாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

மத்திய மாகாண அரசாங்கங்களும் அரசியல்வாதிகளும் இன்னும் எங்களை ஏமாற்றாமல் நியாயமான தமது கோரிக்கையினை நிறைவேற்ற நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது பட்டதாரிகள் வலியுறுத்தினர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் எதிர்காலத்தில் வரும் எந்த தேர்தல்களிலும் தாங்களும் தங்கள் குடும்பங்களும் வாக்களிக்கப்போவதில்லையென்ற உறுதிமொழியை இதன்போது பட்டதாரிகள் எடுத்துக்கொண்டனர்.

கடந்த வாரம் தேர்தலில் வாக்களிக்கப்போவதில்லையென பட்டதாரிகள் உறுதிமொழியை ஒன்றுடி கைகளை நீட்டி எடுத்திருந்தவேளையில் இன்று முஸ்லிம் பட்டதாரிகள் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

கடந்தவாரம் இடம்பெற்ற உறுதிமொழி நிகழ்வில் முஸ்லிம் பட்டதாரிகள் கலந்துகொள்ளவில்லையெனவும் அந்த உறுதிமொழி தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராகவே எடுக்கப்பட்டதாகவும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படவில்லையென்ற வகையில் சில விசமிகள் பிரசாரங்களை மேற்கொண்டுவந்த நிலையில் இந்த உறுதி மொழியை முஸ்லிம் பட்டதாரிகள் மீண்டும் எடுத்துக்கொண்டதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது இடம்பெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ‘வெற்றிடங்கள் ஏராளம்,பட்டதாரிகள் வீதியோரம’;,எதிர்க்கட்சி ஆளும் கட்சிக்கா எமக்கா?,தட்டித்திறக்கவில்லையாயின் முட்டித்திறப்போம்,பட்டதாரிகளை தெருவில்விட்ட நல்லாட்சி,நல்லாட்சி என்ன மெல்ல கொல்லும் விசமா?,போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இதன்போது தமக்கான உரிமையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டன.