ஊடகவியலளார்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து –மட்டு.தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு,கல்குடா பகுதியில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினைக்கண்டித்து இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள்,பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

நல்லாட்சி அரசே ஊடகசுதந்திரத்தினை உறுதிப்படுத்து,ஊடகவியலளார்கள் மீதான தாக்குதல் விசாரணையை துரிதப்படுத்து,ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து,நல்லாட்சியிலும் ஊடக அடக்குமுறையா போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஊடகவியலாளர்கள் ஏந்தியிருந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை கல்குடாவில் அமைக்கப்பட்டுவரும் மதுபானசாலை தொடர்பில் செய்தி சேகரிக்க சென்றவர்கள் மீது ஆறு பேர் கொண்ட குண்டர் குழு தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் அவர்களை கொலை அச்சுறுத்தலும் விடுத்திருந்து.

இது தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதேவேளை இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட ஏனைய நான்கு பேரும் கைதுசெய்யப்படவேண்டும் என்பதுடன் இது தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்படும் மதுபான உற்பத்தி நிலையங்களை தடுத்து நிறுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

ஊடகவியலாளர்கள் தமது கடமையினை தடையின்றி மேற்கொள்ளும் வகையில் ஊடகசுதந்திரத்தினை உறுதிப்படுத்தவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் வா.கிருஸ்ணகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த கால யுத்த சூழ்நிலையில் பல்வேறு அச்சுறுத்தல்கள் மத்தியில் ஊடகவியலாளர்கள் தமது பணியை மேற்கொண்டுவந்த நிலையில் இன்று நல்லாட்சி என்று சொல்லப்படும் காலத்திலும் அந்த அச்சுறுத்தல் தொடர்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்டிய அவர் இன்று குண்டர்களும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நிலையேற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.