வாழைச்சேனை பிரதேசத்தில் FUTURE MIND அமைப்பினால் டெங்கு நோயைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு

நாட்டின் பல மாவட்டங்களில் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தாக உருவெடுத்து வரும் டெங்கு நுளப்பு தாக்கத்தினால் தினந்தோறும் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டும், கனிசமான மக்கள் பாதிக்கப்பட்டும் வருகின்றனர்.

இதனைக் கட்டுப்படுத்தும் ஒரு செயற்பாடாக இன்று (26.03.2017) FUTURE MIND அமைப்பினால், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரிகளுடனும், பல்வேறு பொது அமைப்புக்களுடனும் இணைந்து வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம். சிஹாப்தீன் அவர்களின் ஒத்துழைப்புடனும் கோறளைப்பற்று பிரதேசத்தின் பல கிராமங்களில் டெங்கு நோய்த் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்பட்டது. 

இந் நிகழ்வானது வாழைச்சேனை இந்துக்கல்லூரி மைதானத்தில் இருந்து காலை 09.00 மணியளவில் ஆரம்பமாகி, விபுலானந்தர் வீதி வழியாகச் சென்று, புதுக்குடியிருப்பு, கண்ணகிபுரம், கருணைபுரம், விநாயகபுரம் கிராமங்களுக்குச் சென்று இறுதியாக கல்குடா வீதி, பேத்தாழை ஊடாகச் சென்று மீண்டும் இந்துக்கல்லூரி மைதானத்தில் நிறைவடைந்தது. 

இந் நிகழ்வில் FUTURE MIND சமூக மேம்பாட்டு அமைப்பின் அங்கத்தவர்களுடன் வாழைச்சேனை மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ரா.நிதிராஜ், வாழைச்சேனைக்கான பொது சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.எம். நெளபர், கல்குடாவிற்கான பொது சுகாதார பரிசோதகர் யூ.எல்.ஏ.மஜித் மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபை ஊழியர்கள், விநாயகபுரம் Crown விளையாட்டுக்கழக அங்கத்தவர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் வீதியூடாக சென்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், பொதுமக்களின் காணிகளுக்கு பொது சுகாதாரப் பரிசோதகர்கள் பரிசோதனையிலும் ஈடுபட்டு, டெங்கு நுளப்பு பெருகக்கூடிய வகையில் காணிகளை வைத்துள்ள உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல்களையும் வழங்கியிருந்தனர். 

மேற்படி நிகழ்விற்கு தண்ணீர் போத்தல்களை ம. தவரூபன் மற்றும் குளிர்பானங்களை LK Tourism Paasikudah எனும் நிறுவனமும் வழங்கியதோடு. வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் இரண்டு உளவு இயந்திரங்களையும் கழிவுகளை சேகரிப்பதுக்காக வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.