மட்டக்களப்பு மகிழடித்தீவு வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கு அச்சுறுத்தல் -பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கு வைத்தியசாலைக்கு சென்ற இருவர் அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரினால் இந்த முறைப்பாடு கொக்கட்டிச்சோலையில் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வயோதிபரின் சடலம் ஒன்றை வைத்தியசாலையில் இருவர் கொண்டுவந்து ஒப்படைத்த நிலையில் அவற்றினை மீண்டும் கொண்டுசெல்லமுனைந்தபோது பொலிஸாருக்கு அறிவிக்கவேண்டும் என்று வைத்தியசாலை அத்தியட்சகரினால் கூறப்பட்டுள்ளது.

இதன்போது அங்கு வந்திருந்த ஒருவர் மருத்துவர்மீது அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்;துள்ளார்.

இதேவேளை இந்த அச்சுறுத்தல் காரணமாக வைத்தியர் சுகவீன விடுமுறையில் சென்றதன் காரணமாக வைத்தியசாலையின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்ததன் காரணமாக நோயாளர்கள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வைத்திய அத்தியட்சர் ரி.தவனேசனிடம் கேட்டபோது,

தான் தமது கடமையினைச்செய்ததாகவும் அதற்கு சிலர் இடையூறு ஏற்படுத்த முயற்சித்ததுடன் தமக்கு அச்சுறுத்தல் விடுத்தாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிய நான்கு வைத்தியர்கள் அச்சுறுத்தல் இருப்பதாக சுகவீன விடுமுறையில் சென்றதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக அதிகாரிகள் மீது அச்சுறுத்தல்கள் இருந்துவருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ள நிலையில் தொடர்ச்சியாக அதிகாரிகள் மீதான அச்சுறுதல்கள் இடம்பெற்றுவருகின்றன.

எனவே அதிகாரிகள் மீது அச்சுறுதல்கள் விடுப்போர் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.