கஸ்டத்தின் மத்தியில் கல்வி கற்றவர்கள் வீதியில் நிற்பது வேதனையளிக்கின்றது –பட்டதாரிகளின் பெற்றோர்

பல்வேறு கஸ்டங்களின் மத்தியில் தமது பிள்ளைகளை கற்பித்த பெற்றோர் இன்று தமது பிள்ளைகள் வீதிகளில் கிடந்து போராடுவதைக்கண்டு மனம்பொறுக்கவில்லையென வேலையற்ற பட்டதாரிகளின் பெற்றோர் கவலை தெரிவித்தனர்.



எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் வாக்களிப்பதில் இருந்து தவிர்ந்துகொள்வதாக சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்ட வேலையற்றபட்டதாரிகள் மற்றும் குறித்த வேலையற்ற பட்டதாரிகளின் பெற்றோர் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 34வது நாளாகவும் தொடர்ந்துவருகின்றது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து வேலையற்ற பட்டதாரிகளின் பெற்றோர் உறவினர்கள் இன்று காந்தி பூங்கா வருகைதந்து பட்டதாரிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடாத்தினர்.

இதன்போது காந்தி பூங்கா முன்பாக தீயேற்றப்பட்டு எமது பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசியல்வாதிகள் உரிய நடவடிக்கையெடுக்காததன் காரணமாக இனிவரும் காலங்களில் வரும் தேர்தல்களில் எந்த அரசியல்வாதிகளுக்கும் வாக்களிப்பதில்லையென பெற்றோர் மற்றும் பட்டதாரிகள் கைகளை உயர்த்தி சத்தியப்பிரமாணம் செய்தனர்.

இந்த போராட்டத்தில் ஏராளமான பட்டதாரிகளும் அவர்களின் பெற்றோரும் கலந்துகொண்டதுடன் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பெற்றோர்,

இன்று பிள்ளைகள் வீதிகளில் பல்வேறு கஸ்டங்களையும் தாங்கி 34வது நாளாகவும் போராட்டம் நடாத்திவருவது கவலைக்குரியதாகும்.இந்த போராட்டங்களை நடாத்தும் பட்டதாரிகளின் பெற்றோர் மிகவும் கஸ்டத்தின் மத்தியில் கல்வியை தொடர்ந்தவர்கள்.பல்வேறு கஸ்டங்களைத்தாங்கிய பெற்றோர் கல்வி தமது பிள்ளைகளுக்கு வழங்கினர்.

கடந்த காலத்தில் யுத்தம் உட்பட பல்வேறு பிரச்சினைகளையும் தாங்கியவாறு கற்று தமது பட்டக்கல்வியை பூர்த்திசெய்தனர்.பல்வேறு எதிர்பார்ப்புகளுடனேயே அவர்கள் தமது கல்வியை பூர்த்திசெய்தனர்.ஆனர் இன்று அவர்களின் வாழ்கை போராட்டமாக போய்விட்டதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இன்று போராட்டம் நடாத்தும் மாணவர்கள் விரக்தியில் ஏதாவது செய்துகொண்டால் அதற்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.