மூடப்படும் தொழிற்சாலைகளை திறக்காமல் மதுபான தொழிற்சாலையை திறக்க நல்லாட்சி நடவடிக்கை –வியாழேந்திரன் எம்.பி.

நல்லாட்சி அரசும் அதில் அங்கம் வகிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியும் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளைத் திறக்காமல் அதற்கு மாறாக மதுபான உற்பத்தித் தொழிற்சாலையை திறப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுபான உற்பத்திசாலையை மூடுமாறு கோரியும் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சித்தாண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சித்தாண்டி பொது மக்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் இயங்கமுடியாத நிலையில் மூடப்பட்டுள்ள நிலையில் மதுபான உற்பத்தி தொழிற்சாலை திறப்பது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் என்று இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த காலத்தில் ஊடகவியலாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல் மத்தியில் தமது கடமைகளை மேற்கொண்டுவந்த நிலையில் இன்றும்அதே அச்சுறுத்தல்கள் இடம்பெற்றுவருவதை அனுமதிக்க முடியாது எனவும் இங்கு பொதுமக்கள்சுட்டிக்காட்டினர்.

யுத்ததிற்கு பின்னரான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த வித தொழில்வாய்ப்புகளும்ஏற்படுத்தப்படாத நிலையில் மதுபான உற்பத்தி சாலைகளுக்கு மட்டும்அனுமதியளிப்பதன் நோக்கம் என்ன?என்றும் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் எமது மாவட்டத்தில் இருக்கின்ற மூடப்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகள் திறக்கப்படும் என்று எமது மக்கள் எண்ணியிருந்தார்கள். குறிப்பாக காகிதத் தொழிற்சாலை, ஓட்டுத் தொழிற்சாலை என்பவற்றை இவ்வாறான வரிச்சலுகைகளை வழங்கி முதலீட்டாளர்களைக் கொண்டு வந்து திறக்க முடியும். ஆனால் அவை மூடப்பட்டே இருக்கின்றன. 4000 பேருக்கு வாழ்வாதாரத்தை வழங்கிய 354 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளதான எமது காகிதத் தொழற்சாலை இன்று வெறுமனே 50க்கும் உட்பட்ட தொழிலாளர்களோடு இயங்கிக் கொண்டிருக்கின்றது.
2015ம் ஆண்டும் 2016ம் ஆண்டும் வரவு செலவுத் திட்டத்திற்கு நாங்கள் ஆதரவு வழங்கும் போது எமது காகிதத் தொழிற்சாலையைத் திறந்து சிறந்த முறையில் இயங்கச் செய்யுமாறு வலியுறுத்தினோம். இந்த நல்லாட்சியில் எமது மாவட்ட மக்களுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கக் கூடிய எமது மாவட்ட சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத தொழிற்சாலைகளைத் திறவுங்கள் என்று சொன்னோம்.
ஆனால் அவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றே இருக்கின்றன. ஆனால் இந்த நல்லாட்சி அரசும் அதில் அங்கம் வகிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியும் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளைத் திறக்காமல் அதற்கு மாறாக மதுபான உற்பத்தித் தொழிற்சாலையை திறக்கின்றார்கள். இதுதான் நல்லாட்சியா என்று எமது மக்கள் கேட்கின்ற நிலைமை வந்திருக்கின்றது.