பட்டதாரிகளின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் நாடளாவிய ரீதியில் போராட்டம் -இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வினைக்கண்டு முடிவுக்கு கொண்டுவராவிட்டால் அவர்களுக்கு ஆதரவாக தேசிய ரீதியான போராட்டங்களை மேற்கொள்ளவேண்டிய நிலையேற்படும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாக செயலாளர் க.நல்லதம்பி தெரிவித்தார்.

மட்டக்களப்பில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்து நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டது.

இதன்போது இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டதுடன் மாணவர்களின் போராட்டத்திலும் பங்குகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த செயலாளர் நல்லதம்பி,
மிகவும் கஸ்டப்பட்டு கற்று பல்கலைக்கழகம் சென்று பட்டத்தினைப்பெற்றதன் பின்னர் அவர்களுக்கான தொழில்வாய்ப்புகள் இல்லாமல் அலைக்கழிக்கப்படுவது அந்த இளைஞர்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும்.

இன்று பாடசாலைகள் திணைக்களங்கள்,கூட்டுத்தாபனங்களில் பல வெற்றிடங்கள் இருந்தாலும் கூட அவைந pரப்பப்படாமலே இருக்கின்றது.அந்த வெற்றிடங்களுக்கு இவ்வாறான பட்டதாரிகளை நியமிப்பதன் மூலம் பல பிரச்சினைகளை முடிவுக்குகொண்டுவரமுடியும்.

இன்று கிழக்கு மாகாணத்தில் ஆசிரிய பற்றாக்குறை காணப்படுகின்றது.அவ்வாறான இடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதன் மூலம் ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும்.இன்று கிழக்கு மாகாணத்தில் ஆசிரிய பற்றாக்குறை காரணமாக அதிகளவான மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலையிருந்துவருகின்றது.

குறிப்பாக இன்று மட்டக்களப்பு மேற்கு வலயம்,கல்குடா வலயம்,மூதூர் வலயம்,திருக்கோவில் வலயம் ஆகியவற்றில் அதிகளவான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.இதனால் இப்பகுதியில் அதிகளவான மாணவர்கள் கல்வியை இழக்கின்றனர்.இந்த நிலைமை மாற்றப்படவேண்டும்.

இது தொடர்பில் மத்திய அரசாங்கமும் மாகாண அமைச்சும் கவனத்தில் கொண்டு இந்த பட்டதாரிகளுக்கு அந்த நியமனங்களை வழங்குவதன் ஊடாக ஆசிரிய பற்றாக்குறை நீங்குவதுடன் மாணவர்களுக்கு கல்வியை தடையின்றி வழங்கும் நிலையேற்படும்.பாடசாலையில் ஆசிரியர்கள் இல்லாத நிலையில் கல்வியை வளர்க்கமுடியாது.அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு ஆசிரியர் பற்றாக்குறைகள் நிவர்த்திசெய்யப்படவேண்டும்.

ஆதற்காக இந்த பட்டததாரிகளை உள்ளீர்ப்பதற்கான தருணம் இதுவாகும்.இனியும் காரணங்களை கூறி காலங்களை தட்டிக்கழிப்புகளை செய்யாமல் நல்லாட்சி அரசாங்கம் கவனத்தில்கொள்ளவேண்டும்.பட்டதாரிகளின் போராட்டங்கள் தொடர்ந்து செல்லக்கூடாது.மிக நீண்ட போராட்டமாக இந்த இளைஞர்களின் போராட்டம் சென்றுகொண்டுள்ளது.

குறித்த பட்டதாரிகளின் போராட்டத்திற்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அனுசரணையாகவும் ஆதரவாகவும் இருப்போம்.இந்த போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் தேசிய மட்டத்தில் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய நிலையேற்படும்.

இவற்றினை அரசாங்கங்கள் கவனத்தில் எடுத்து தொழில்வாய்ப்புகளை வழங்கும் உத்தரவாதங்களை வழங்கி பிரதேசங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதுடன் பட்டதாரிகளின் போராட்டத்திற்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின்ஆதரவு முழுமையாக இருக்கும். ஏன்றார்.