எங்களுக்கான உதவிகளை செய்ய யாரும் முன்வருவதில்லை -இரண்டு பிள்ளைகளை இழந்த தாய் கதறல்

இன்னும் இன்னும் எங்களை வாக்களிக்கவே சொல்கின்றனர்.எங்களுக்கான உதவிகளை செய்வதற்கு யாரும் அற்ற நிலையிலேயே இருப்பதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இரண்டு ஆண்பிள்ளைகளைப்பெற்று இன்று எந்த உதவியும் இல்லாத நிலையிலேயே தாங்கள் இருந்துவருவதாக இரண்டு பிள்ளைகளைப்பறிகொடுத்த மண்டூரைச்சேர்ந்த வயோதிப பெண்னொருவர் தெரிவித்தார்.

பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் பிள்ளைகளை வளர்த்து,அவர்கள் தங்களை கவனிக்கும் நிலையில் அவர்கள் கடத்தப்பட்டு காணாமல்போகச்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர்,தன்னை இறுதிக்காலத்தில் கவனிப்பதற்கு தனது பிள்ளைகள் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடைபெற்றது.

வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நிலைமாறுகால நீதிக்கான அமைச்சு ஒன்று உருவாக்கப்படவேண்டும்,சர்வதேச நீதிபதிகளைக்கொண்ட நீதி பொறிமுறையை ஏற்படுத்தவேண்டும்,காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பணிக்குழு அறிக்கையினை உடன் அமுல்படுத்து போன்ற கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

எந்த ஆட்சி வந்தாலும் எங்களை ஏமாற்றும் ஆட்சியே வருவதாக அரசியல்வாதிகளினால் தாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டில் இரண்டு பிள்ளைகளை இழந்த பல தாய்மார்கள் கலந்துகொண்டு தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.