அரசியலில் பெண்களுக்கான வகிபங்கை அதிகரிக்க வாய்ப்பை வழங்குங்கள். இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தர்ஷிக்கா வேண்டுகோள்.

(சசி துறையூர்) பிரதேச ,மாகாண மற்றும் தேசிய அரசியலில் பெண்களின் வகிபங்கை அதிகரிக்க அதற்கான வாய்ப்புக்களை உருவாக்க,  எமது பாராளுமன்ற உறுப்பினர்கள்  முன்வர வேண்டுமென மட்டக்களப்பு தேர்தல் தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி அருள்நாயகம் தர்ஷிக்கா வேண்டுகோள்.

அண்மையில் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி தலைமையில் நடைபெற்ற பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் மற்றும் இளைஞர் கெளரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தனது உரையில் நான் இளம் பெண் அரசியல் பிரதிநிதியாக உங்கள் மத்தியில் நின்று பேசுகிறேன் என்றால் அதற்கு காரணம் உங்களின் வாக்குப்பலம், என்னைத்தெரிவு செய்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

இளைஞர்களின் பிரதிநிதியாக என்னால் முடிந்தவரை இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். ஒரு விடயத்தை நான் இங்கு முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டும் எமக்கு நிதி ஒதுக்கீடுகளோ வேலைத்திட்டங்களோ கிடைப்பதில்லை.

ஆனாலும் எமது பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படுவதால் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியுமென நம்புகிறேன். கடந்த வாரம் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்  இலங்கை பாராளுமன்றத்திற்கு சென்றிருந்தோம் அங்கு பாராளுமன்ற செயலாளர் அவர்களிடம் இது தொடர்பாக பேசியிருக்கிறோம்.

கொள்கைத்திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக பல இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது, இந்த வாய்ப்புக்களை இளைஞர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் கச்சிதமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் அதற்கான வழிகாட்டுதல் வேலைத்திட்டங்களையும் கிராமம் தேறும் முன்னெடுக்கவுள்ளேன்.

தேசி இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேலைத்திட்டங்களில் தனிமனித ஆளுமை மற்றும் திறன் விருத்தியோடு அரச  தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பும் சூழலும் அதிகமாக காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்ட்டார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் கெளரவ கி.துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.