கிழக்கில் அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் அரசசேவையில் உள்ளீர்ப்பதற்கு அனுமதி –வெற்றி என்கிறார் கிழக்கு முதலமைச்சர்

கிழக்கு மாகாணத்தில் உள்ள  ஆசிரிய வெற்றிடங்களை  நிரப்புவதற்கான  அனுமதி கிடைத்துள்ள  நிலையில்  அதற்கு  பட்டதாரிகளை முழுமையாக உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் முன் எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார் ,
அத்துடன்  ஒவ்வொர் துறைசார் பட்டதாரிகளையும் அவரவர் துறைசார் ரீதியிலான  வெற்றிடங்களுக்கு நிரப்புவதற்கு ஏதுவான  யோசனைகளை  வழங்குமாறும் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம்  தேசிய கொள்கைகள் மற்றும்  பொருளாதார  விவகார அமைச்சின்  ஆலோசகர் ஆர் பாஸ்கரலிங்கம் கேட்டுக்  கொண்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகர் ஆர் பாஸ்கரலிங்கம் தலைமையில் இன்று  திறைசேரியில்  இடம் பெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானங்கள்  எடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்,கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்,தண்டாயுதபானி,தேசிய கல்வியமைச்சின் செயலாளர், மாகாண கல்வியமைச்சின் செயலாளர்,கல்விப் பணிப்பாளர், திறைசேரியின் பிரதிநிதி,தேசிய முகாமைத்துவத் திணைக்களத்தின் பிரதிநிதிகள், தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர்,மாகாண தலைமை செயலாளர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்,

இதன் போது  கிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை உள்ளீர்ப்பது  தொடர்பான கட்டமைப்பொன்றை  ஒரு கிழமைக்குள் தயாரித்து  வழங்குமாறு கல்விப் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த  கட்டமைப்பு உருவாக்கப்படும் காலப்பகுதியில் மாகாணத்தில் உள்ள 4703  ஆசிரியர்  வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிக ளை  எவ்வாறு  உள்ளீர்ப்பது  என்பது  தொடர்பான பொறிமுறையை  தயாரிக்குமாறும் கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது,

இதனூடாகா  மாகாணத்தில் உள்ள  வெற்றிடங்க ளை  நிரப்புவதற்கான  முழுமையான  வாய்ப்பு கிடைத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறினார்.
அத்துடன்  மாகாணத்தில்  உள்ள பாடசாலைகள்,அரச திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களையும்  உடனடியாக நிரப்புவதற்கான  அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனடிப்படையில்  பாடசாலைகளில்  நிலவும் 67 ஆய்வுகூட உதவியார்கள், 284 பாடசாலைக் காவலாளிகள்,261 பாடசாலை சிற்றூழியர்ள் மற்றும் 384 சுத்தகரிப்புப் பணியாளர்களுக்கான வெற்றிடங்கள் இதன் போது நிரப்பப்படவுள்ளன,
 சுகாதாரத் துறையில் உள்ள 300க்கும்  மேற்பட்ட வெற்றிடங்களையும்  நிரப்புவதற்கான  அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் முதலமைச்சரின் கோரிக்கைக்கிணங்க கிண்ணியா பகுதியிலுள்ள வைத்தியசாலையின் குறைபாடுகளை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது,

மற்றுமட தேசிய வீடமைப்பு அதிகார சபை உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின்  வெற்றிடங்கள் நிரப்பப்டவுள்ளன.

அத்துடன் விரைவில்  குறித்த  வெற்றிடங்களை நிரப்புவதற்கு  உடனடியாக நடவடிக்கைகளை  முன்னெடுக்குமாறு பொதுச்சேவை  ஆணைக்குழுவுக்கு  இதன் போது பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு ஏதுவான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு  முகாமைத்துவ திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது,எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் கிழக்கில் உள்ள  வெற்றிடங்களை  நிரப்புவதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கடந்த வருடம் உறுதியளித்திருந்த நிலையில்  தற்போது அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கான செயற்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களும் அரசாங்க தரப்பில் பாரிய அழுத்தங்களை வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது

கடந்த  இரண்டு நாட்களாக  சுகவீனமுற்றிருந்த நிலையில் இன்று  அவரசமாக சிகிச்சைக்கு இந்தியா செல்லவிருந்த போதும் அதனையும் பின்தள்ளியே முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.