2012 மற்றும் 2013ஆம் ஆண்டு பட்டங்களை பூர்த்திசெய்தவர்களை முதல் கட்டமாக உள்வாங்க நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளில் முதல்கட்டமாக 2012 மற்றும் 2013ஆம் ஆண்டு பட்டங்களை பூர்த்திசெய்தவர்களை அரச சேவைக்குள் உள்வாங்குவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறுக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக 22 நாளாகவும் அமைதியான முறையில் சத்தியாக்கிரக போராட்டத்தினை நடாத்திவருகின்றனர்.

பட்டதாரிகள் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறுக் இன்று நடைபெற்ற கூட்டம் தொடர்பிலும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் முதலமைச்சரின் பிரதிநிதியாக மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

மத்திய மாகாண அரசாங்கங்கள் தமக்கான நியமனத்தினை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தினை நடாத்திவருகினற்னர்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் பிரதமரின்  பணிப்புரைக்கமைய அவரின் ஆலோசகர் ஆர் பாஸ்கரலிங்கம்    தலைமையில் விசேட கூட்டம் ஒன்று திறைசேரியில் நடைபெற்றது.

இந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட்,கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி உட்பட திட்டமிடல் திணைக்களம் மற்றும் திறைசேரி அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணசபையில் உள்ள வெற்றிடங்களை நிரப்பும் வகையில் முதல் கட்டமாக 2012 மற்றும் 2013ஆம் ஆண்டு பட்டங்களை பூர்த்திசெய்தவர்களை உள்வாங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் ஏனைய 2014 மற்றும் 2015ஆம்2016ஆம் ஆண்டு பட்டங்களை பூர்த்திசெய்தவர்கள் உள்வாங்கப்படாமை நாங்கள் எதிர்பார்த்ததற்கு கிடைத்த தோல்வியாகவே கருதவேண்டியுள்ளது.

அரசாங்கம் அவர்களுக்குரிய உறுதிமொழியை வழங்கவேண்டிய தேவையுள்ளது.அந்த உறுதிமொழி வழங்கப்படும்போதே அவர்கள் போராட்டத்தினைகைவிடுவார்கள் என நினைக்கின்றேன். காலங்களை வரையறுக்காமல் அனைத்து பட்டதாரிகளையும் உள்வாங்குவதன் மூலமே வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்கலாம் என நம்புகின்றோம்.என்றார்.

எனினும் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டு பட்டங்களை பூர்த்திசெய்தவர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டமையினை வரவேற்றுள்ள பட்டதாரிகள் அனைவரையும் உள்வாங்கும்போதே தமது போராட்டம் நிறைவுபெறும் என தெரிவித்தனர்.

குறைந்தபட்சம் ஏனைய பட்டதாரிகளையும் நியமனங்களுக்கு உள்வாங்குவதற்கான கால அவகாசத்தையாவது அரசாங்கம் தரும்போதே தமது போராட்டம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யமுடியும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.

2012,2013ஆம் ஆண்டு பட்டங்களை பூர்த்திசெய்த மிகவும் குறைந்த பட்டதாரிகளே உள்ளதாகவும் 2014 மற்றும் 2015 பட்டங்களை பூர்த்திசெய்த அதிகளவான பட்டதாரிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.