தொழில் வழங்குவதாக வாக்குறுதியளித்தவர்கள் அதனை நிறைவேற்றவேண்டும் -மட்டு.பட்டதாரிகள் கவலை

வாக்கு பெற்றுவரும்போது மட்டக்களப்பு அரசியல்வாதிகள் தொழில்வாய்ப்புகளைப்பெற்றுத்தருவோம் என்ற வாக்குறுதியை தந்த நிலையில் இன்று அந்த வாக்குறுதியை நிறைவேற்றாது விலகிச்செல்கின்றமை கவலையளிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் உப தலைவர் எஸ்.சிவானந்தன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக 22 நாளாகவும் அமைதியான முறையில் சத்தியாக்கிரக போராட்டத்தினை நடாத்திவருகின்றனர்.

மத்திய மாகாண அரசாங்கங்கள் தமக்கான நியமனத்தினை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் என வலியுறுத்தி நடைபெற்றுவரும் இந்த போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகள் ஆதரவினை முழுமையாக வழங்கிவரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளினால் போதிய ஆதரவு வழங்கப்படவில்லையென பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் காலங்களில் வேலைவாய்ப்பினைப்பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதிகளை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட தாங்கள் தொடர்பில் பாராமுகமாக இருப்பதாகவும் பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நேற்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்த அதேவேளை நாளை புதன்கிழமை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தந்தி அனுப்பும் போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளனர்.

கடந்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எதுவித தளர்வும் இல்லாமல் அதேவீரியுத்துடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாக மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் உப தலைவர் எஸ்.சிவானந்தன் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த அவர்,
எமது நியாயமான போராட்டத்திற்கு அரசாங்கம் தலைசாய்க்காத நிலையில் கிழக்கு மாகாணசபை பிரதமருடன் பேசி எமக்கான தீர்வினைப்பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது.இதன்மூலம் எமது நியாயமான போராட்டத்திற்கு ஒரு தீர்வு எட்டப்படும் என நம்புகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 1500 வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் கிழக்கில் உள்ள 5000 வேலையற்ற பட்டதாரிகளை பயிற்சி அடிப்படையிலாவது உள்வாங்கி அவர்களுக்கான வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்.எமது போராட்டம் தொடர்பில் எள்ளளவும் எமது உறுதிப்பாடு குறையவில்லையென்பதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எமக்கான தீர்வினைப்பெற்றுக்கொடுக்க முன்வராமல் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவழங்க திறைசேரியிடம் பணம் இல்லையென்று கூறிவருகின்றனர்.இது எங்களுக்கு பெரும் மன உளைச்சலையும் கவலையினையும் ஏற்படுத்துவதாகவுள்ளது.
நாங்கள் பட்டம்பெற்று தனியார் வேலையை நாடிச்செல்லும்போது நீங்கள் பட்டம் முடித்துள்ளீர்கள்,அரச வேலை கிடைத்தால் விட்டுவிட்டு சென்றுவிடுவீர்கள் என எங்களுக்கு தொழில்தர மறுக்கின்றனர்.நான்கு வருடம் பட்டப்படிப்பினை பூர்த்திசெய்த பின்னர் நான்கு வருடம் கூலித்தொழில்கள் செய்து குடும்பத்தினை நடாத்தும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் ஒன்றை விளங்கிக்கொள்ளவேண்டும்.வாக்குப்பெறவந்தபோது தொழில்பெற்றுத்தருவோம் என்ற வாக்குறுதிகளை வழங்கியவர்கள் அதிலிருந்து பின்வாங்கிச்செல்லும் நிலை காணப்படுகின்றது.இது மிகவும் மனவேதனையை ஏற்படுத்துவதாகவுள்ளது.எனவே எமது தொழில் உரிமையை பெற்றுத்தருவதற்கு அனைத்து அரசியல்வாதிகளும் இணைந்து நடவடிக்கையெடுக்கவேண்டும் என அனைத்து வேலையற்ற பட்டதாரிகள் சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.