மட்டக்களப்பில் பெண்களின் குரல் பாதயாத்திரை

பெண்களின் குரலை ஓங்கி ஒலிக்கச்செய்வதற்கான பிரசார பாதயாத்திரை இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இயங்கி வரும் பிரதேச பெண்கள் செயலணியும் மாவட்ட மகளிர் பிரிவும் இணைந்து இந்த நிகழ்வினை முன்னெடுத்தது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இருந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் பாதயாத்திரை நடைபெற்றது.

பெண்களுக்கான அரசியல் உரிமையை உறுதிப்படுத்தல்,தோட்டத்தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தல்,பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்தல் போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை பாதயாத்திரையில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
பாதயாத்திரையை தொடர்ந்து மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வுகளில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.