மட்டக்களப்பு முனைக்காட்டில் 36 வருடத்திற்கு பின்னர் காணி உறுதிப்பத்திரம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் 36வருடமாக காணி உறுதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு உறுதிப்பத்திரம் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் மேற்கொண்டுள்ளார்.

1981 ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் முனைக்காடு தெற்கில் 30 வீடுகள் கொண்ட ஒரு வீட்டுத்திட்டம் உருவாக்கப்பட்டது.

கடன் அடிப்படையில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளின் கடன்களை அந்த மக்கள் கட்டிமுடித்தபின்பும்,இதுவரை அவர்களுக்குரிய காணிகளுக்கான எந்தவிதமான உரிமைப்பத்திரங்களும் வழங்கப்படவில்லை.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த விடயத்தை முனைக்காடு கொட்டாம்புலைப்பிள்ளையார் கோவில் தலைவர் மாகாணசபை உறுப்பினரின் கவனத்துக்கு கொண்டுவந்ததின் பின்பு,கொழும்பு காணிஅலுவலகத்துக்கும், திருகோணமலை மாகாண காணிஅலுவலகத்துக்கும் சென்று இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக அவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டது.

இவ்வாறு காணிப்பத்திரம் இல்லாதவர்களுக்கான காணி கச்சேரி பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி தினேஸ் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது குறித்த வீட்டுத்திட்டத்தில் இதுவரையில் காணி உறுதிகள் கிடைக்காதவர்கள் கலந்துகொண்டனர்.இதில் மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமும் கலந்துகொண்டார்.