24வது நாளாக தொடரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம்

தமக்கான நியமனங்களை கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக 24வது நாளாகவும் சத்தியாக்கிரகம் போராட்டம் நடாத்திவரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று வியாழக்கிழமை தாங்கள் பெற்ற பட்டம்பெற்ற சான்றிதழை கொடியாக கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு மாதகாலத்தினை நெருங்கும் தமது சாத்வீக போராட்டத்திற்கு இதுவரையில் சாதகமான பதில்கள் வழங்கப்படவில்லையென பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமது சத்தியாக்கிரக போராட்டத்திற்கு அரசியல்வாதிகளின் ஆதரவு மிகவும் குறைந்தளவிலேயே உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வடகிழக்கில் உள்ள மக்கள் அனைத்து உரிமைகளையும் போராடியே பெறவேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை இன்றும் நிலவுவதாகவும் கவலை தெரிவிக்கும் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்காலத்தில் தமது அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் சிந்திக்கவேண்டிய நிலைவரும் எனவும் தெரிவிக்கின்றனர்.

வேலையற்ற பட்டதாரிகளின் நிலைமைகள் தொடர்பில் உரிய அழுத்தங்களை வடகிழக்கில் உள்ள அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் விடுக்கவில்லையெனவும் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர்.

வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள பட்டதாரிகள் அந்ததந்த பகுதிகளில் தொழில்களைப்பெற்றுக்கொள்வதற்கான அனைத்து வசதிகளும் இருக்கின்ற நிலையில் இதுவரையில் இங்கு என்ன அபிவிருத்தியை அரசியல்வாதிகள் மேற்கொண்டுள்ளார்கள் எனவும் அவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

தமது கோரிக்கைகளுக்கான சரியான தீர்வினை வழங்கும் வரைக்கும் போராட்டம் தொடரும் எனவும் அதற்கான அழுத்தங்களை மாகாணசபைக்கும் மத்திய அரசுக்கும் கொடுக்கவேண்டும் எனவும் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.