மட்டக்களப்பு மாவட்டத்தில் 11வது நாளாகவும்தொடரும் பட்டதாரிகளின் போராட்டம் -பயிற்சி ஆசிரியர்களாக இணைக்க பணிப்பு –ஜோன் அமரதுங்க

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரிய பயிற்சி அடிப்படையில் உள்வாங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மதவிவகா அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மத்திய மாகாண அரசாங்கங்கள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கவேண்டும் என்று கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 11வது நாளாகவும் கடும் மழைக்கும் வெயிலுக்கும் மத்தியில் நடைபெற்றுவருகின்றது.

காந்தி பூங்கா முன்பாக ஒன்றுதிரண்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள் வீதிகளில் சமைத்து வீதிகளிலேயே உண்டு,உறங்கி 11வது தினமாக தமது போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ந்து விரிவடைந்துவருவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகளும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக கிழக்கு மாகாணசபை அறிவித்துள்ளபோதிலும் அது தொடர்பில் தமக்கு உறுதியான நடவடிக்கை தமக்கு இதுவரையில் தெரியப்படுத்தபப்டவில்லையென பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் 4700 பட்டதாரிகளை ஆசிரிய நியமனங்களுக்கு உள்வாங்குவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாணசபையும் பிரதமர் அலுவலகமும் மேற்கொண்டுவருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் எனவும் முதலமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கையெடுக்குமாறு பிரதியமைச்சர் அமீர்அலி,தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு பிரதமர் நடவடிக்கையெடுத்துள்ளதாக மட்டக்களப்புக்கு இன்று வருகைதந்துள்ள அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பயிற்சி அடிப்படையில் பட்டதாரிகளை ஆசிரியர் நியமனங்களுக்குள் உள்வாங்கி அவர்களை நிரந்தரமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.