மட்டக்களப்பு நகரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல்

மட்டக்களப்பு நகரில் மங்கலராமய விகாராதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டம் நடாத்திவந்த இளைஞர்கள் மீது பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற கட்டளையினை மீறி மங்கலராமய விகாராதிபதி பொதுமக்களை ஒன்றுகூட்டி பொலிஸார் நிற்கும்போதே அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமிழ் முஸ்லிம் மக்களை கடுமையான வார்த்தை பிரயோகங்களாலும் திட்டிய நிலையில் அது தொடர்பில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சட்டத்தை அமுல்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

மங்கலராமய விகாரைக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் நின்று மட்டக்களப்பு பிரதேசத்தினை சேர்ந்த தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் பொதுமக்கள் இணைந்து இந்த போராட்டத்தினை மேற்கொண்டனர்.

மங்கலராமய விகாராதிபதியை கைதுசெய்யவேண்டும்,பொதுபலசேனாவை மட்டக்களப்புக்குள் அனுமதிக்ககூடாது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விகாராதிபதியின் அடாவடித்தனங்கள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த இளைஞர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் இன்று இரவு 8.45மணியளவில் வீதியில் நின்று தமது போராட்டங்களை நடாத்திவந்தவர்கள்  தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதன்போது சிலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் அது தொடர்பான விபரங்கள் எதனையும்பெறமுடியாத நிலையே இருக்கின்றது.

நீதிமன்ற உத்தரவினையும் மீறி ஆர்ப்பாட்டம்,ஊர்வலத்தை நடத்திய மங்கலராமய விகாராதிபதி மற்றும் அவரது ஆதரவாளர்களை கைதுசெய்யாது அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிவிட்டு அவர்கள் செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொலிஸார் அமைதியான முறையில் மேற்கொண்;ட தம்மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு ஓரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் இருக்கின்றது என்பதை பொலிஸார் இன்று நிரூபித்துள்ளதாகவும் இதுதான் நல்லாட்சியின் வெளிப்பாடு எனவும் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாரிடம் கேட்டபோது பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்தே ஆர்ப்பாட்டக்காரர்களை தாம் கலைத்ததாக தெரிவித்தனர்.

எனினும் பொலிஸார் தாக்குதல் நடாத்துவதற்கு முன்னர் அப்பகுதியில் எந்தவித சம்பவங்களும் நடைபெறவில்லையென சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.