பட்டிருப்பு கல்வி வலயத்தின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

மட்டக்களப்பு,பட்டிருப்பு கல்வி வலயத்தின் 2014ஆம் ஆண்டுக்கான சாதனையாளர் பாராட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை களுதாவளை மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர்களான கலாநிதி மு.இராஜேந்திரம், கலாநிதி எஸ்.அரசரெத்தினம்,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் மு.கோபாலரட்னம்,ஓய்வுபெற்ற வடகிழக்கு மாகாண பிரதிக்கல்வி செயலாளர் ரி.பொன்னம்பலம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 92 பாடசாலைகளில் பல்வேறு சாதனைகளை தேசிய, மாகாண, மாவட்ட மட்டங்களில் சாதனை படைத்த 423 மாணவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் கல்வி வளர்ச்சிக்காக அரும்பணியாற்றி ஓய்வுபெற்றுச்செல்லும் ஆசிரியர்கள்.அதிபர்,கல்வி திணைக்கள அதிகாரிகளும் இதன்போது அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.

இதேபோன்று மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அர்ப்பணிப்புமிக்க சேவையினையாற்றிவரும் அதிபர்கள்,ஆசிரியர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் கல்வித்துறையில் பெரும் சாதனைகளைப்படைத்துவரும் பட்டிருப்பு கல்வி வலயத்தின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வில் கல்வியலாளர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.