மட்டக்களப்பு நகரில் பிக்கு ஆர்ப்பாட்டம் -இளைஞர்கள் ஒன்றுகூடியதால் தொடரும் பதற்ற நிலைமை

மட்டக்களப்பு நகரில் மங்கலராம விகாராதிபதி மற்றும் பொதுபலசேனா ஆதரவாளர்கள் மேற்கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளதை கண்டித்து மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடாத்த மங்கலராம விகாராதிபதி முயன்றதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன் மட்டக்களப்பு நகரம் யுத்தக்களமாக காட்சியளித்தது.

இன்று சனிக்கிழமை மட்டக்களப்பில் மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கல ரத்ன தேரருக்கு ஆதரவளிக்கும் வகையில் மட்டக்களப்பு நகரில் பொதுபலசேனாவினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதற்கான முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுமானால் நகரில் பொதுமக்களுக்கு பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்படும் எனவும் அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனவும் அதன் காரணமாக குறித்த ஆர்ப்பாட்டத்தினை தடைசெய்யுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு நகரில் பொதுபலசேனா பொதுக்கூட்டம் நடாத்தவோ,ஆர்ப்பாட்டம் நடத்துவதோ தடைசெய்யப்படுவதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நீதிமன்றத்தின் தடையினை எதிர்த்து மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கல தேரர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்த மட்டக்களப்பு பிரதான வீதிக்கு செல்லமுற்பட்டபோது பொலிஸார் தடுப்புகளை ஏற்படுத்தி அவர்களை தடுத்ததன் காரணமாக சந்தை வீதி வழியாக பயனியர் வீதி மற்றும் கொலட் வீதிகளில் சென்று ஆர்ப்பாட்டங்களை தேரரும்அவரின் ஆதரவாளர்களும் மேற்கொண்டதுடன் தகாத வார்த்தைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வெளியிட்டுவந்தனர்.

எனினும் அவர்களின் எதிர்ப்பு போராட்டத்தினை கட்டுப்படுத்தமுடியாமல் பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை காணமுடிகின்றது.

இந்த நிலையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்துகளையும் இதன்Nபுhது சிலர் தெரிவித்தபோது அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் பலத்த எதிர்ப்பினை தெரிவித்தனர்.
அத்துடன் தேரரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து மட்டக்களப்பு நகரில் பெருமளவான பெருமளவான தமிழ்-முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

தேரர் நீதிமன்ற ஆணையை மீறி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுவரும் நிலையில் அதனை பொலிஸார் வேடிக்கை பார்ப்பதாகவும் தம்மை மட்டும் பொலிஸார் கட்டுப்படுத்தமுனைவதாகவும் எதிர்ப்பில் கலந்துகொண்டவர்கள்தெரிவித்தனர்.

இதன்போது இளைஞர்களுக்கும் பௌத்த துறவி மற்றும் சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே பெரும் வாக்குவாதங்கள் சென்றுகொண்டிருந்த நிலையில் முறுகல் நிலையும் ஏற்படுவதற்கான நிலைமை உருவானது.

அந்தவேளையில் அங்குவந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன் ஆகியோர் பொலிஸாருடன் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு வந்த கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் சுமித் எதிரிசிங்கவிடம் பொன்.செல்வராசா நீதிமன்ற ஆணையை மதித்து குறித்த பிக்குவினை கைதுசெய்யவேண்டும்.வெளியில் அவர் மேற்கொண்டுள்ள செயற்பாடுகளை தடுத்து நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதன்போது தடுப்பு கம்பி மேல் ஏறிநின்று ஆர்ப்பாட்டம் செய்த மங்கலராம விகாராதிபதியை அதில் இருந்து இறக்கி அதன் ஆதரவாளர்களுடன் விகாரைக்குள் கொண்டுசெல்லப்பட்டனர்.
தொடர்ச்சியாக குறித்த தேரர் மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்களை நிறுத்துவதற்கு பொலிஸார் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லையென தெரிவித்த பொதுமக்கள் நீதிமன்றத்தின் ஆணையைகூட பொலிஸார் தொடர்ச்சியாக அவமதித்துவருவதாகவும் தெரிவித்தனர்.

இதன்போது வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் எஸ்.வியாழேந்திரன் ஆகியோரும் பொலிஸாரிடம் தமது அதிர்ப்தியை தெரிவித்தனர்.

இதேவேளை பொது பல சேனா உட்பட பல பேரினவாத அமைப்புகள் இணைந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த பேரணி, மட்டக்களப்பு - பொலநறுவை எல்லைப் பிரதேசமான ரிதிதென்ன பகுதியில் பொலிஸாரால் இடை நிறுத்தப்பட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.  
தாம் பூஜையொன்றுக்காகவே அங்கு செல்வதாகப் பொலிஸாருடன் ஞானசார தேரர் வாதத்தில் ஈடுபட்ட போதிலும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய தம்மால் அனுமதிக்க முடியாது எனப் பொலிஸார் பதிலளித்துள்ளனர்.  

இந்நிலையில், வீதியை மறித்து வாகனத்தை நிறுத்தி வீதியில் அமர்ந்து போராட்டம் செய்ததால் அங்கு சென்ற வாகனங்கள் இரு பக்கமும் வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வாகன நெரிசல் மற்றும் போக்குவரத்துத் தடை ஏற்பட்டது.

அதேபோன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில் மற்றும் போக்குவரத்து பஸ்களில் ஏறி மட்டக்களப்புக்குள் நுழைய முற்பட்ட நிலையில் ரயில் மற்றும் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

சம்ப இடத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை செய்தி எடுக்க வேண்டாம் என்றும் மீறிப் படம் எடுத்தால் கமெரா உடைக்கப்படும் என்று பொது பல சேனா அமைப்பைச் சேர்ந்தஇளைஞர்கள் தெரிவித்தனர்.  

ஏற்கெனவே, இவர்களின் மட்டக்களப்பு விஜயத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவொன்றை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம், நேற்று வெள்ளிக்கிழமை (02) மாலை பிறப்பித்துள்ளது.  

இந்த உத்தரவையும் மீறி வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடல் நிகழுமாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மட்டக்களப்பிலுள்ள மங்களராம விஹாரைக்கு விஜயம் செய்யும் பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் ஏறாவூர் நகரம், புன்னைக்குடா மற்றும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசத்தை அண்டிய பதுளை வீதியில் அரச மரம் உள்ள தனியார் காணியொன்றுக்குள் செல்வதாகவும் நிகழ்ச்சி நிரல் இடப்பட்டுள்ளது.  

இதனைக் கருத்திற் கொண்டு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்களும் இனவெறுப்புணர்வுகளைத் தூண்டும் சம்பவங்களும் இடம்பெறலாம் என்பதால் கரடியனாறு பொலிஸார் அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தி வெறுப்புணர்வைத் தூண்டும் ஒன்று கூடலுக்குத் தடை விதிக்குமாறு, நீதி மன்றத்தை வேண்டியிருந்தனர்.   மனுவை ஆராய்ந்த  மாவட்ட பதில் நீதிபதி ஆதம்லெப்பை முஹம்மத் முனாஸ் வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவைத் பிறப்பித்தார்.

எனினும் தொடர்ச்சியாக மட்டக்களப்பு நகர் மற்றும் எல்லைப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருவதன் காரணமாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகமடக்கும் பொலிஸார் இருபகுதிகளிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.