நாவலடி ,டச்பார் பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்ததால் அப்பகுதி மக்கள் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம்

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட  கரையோரப் பகுதியில்  கடல் நீர் உட்புகுந்ததால் கரையோர பகுதி மக்கள் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்த சம்பவம் 11.12.2016  ஞாயிற்றுக்கிழமை இரவு  இடம்பெற்றுள்ளது
.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட நாவலடி ,டச்பார் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை  நள்ளிரவு  கடலிருந்து பாரிய இரைச்சலுடன் கடல் நீர்  நிலப்பகுதிக்குள் உட்புகுந்துள்ளது  .

இதன் காரணமாக   கடல் நீர் தங்களின் வீடுகள் இருக்கும் இடத்தை நோக்கி வருவதைக் கண்ட அப்பகுதி மக்கள் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேறியதாககவும் அதேவேளை அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.  

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா கடல் நீர் உட்புகுந்த நாவலடி   பகுதிக்கு சென்று  பார்வையிட்டுள்ளார் .

இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் வினவிய போது அவர்   கூறுகையில்  குறித்த சம்பவம் 11.12.2016  ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றுள்ளதாகவும் இப்பகுதியில்  கடல் நீர் உட்புகுந்ததால் அச்சத்தின் காரணமாக  கரையை அண்டிய  பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் பாதுகாப்புக்காக தங்களது உறவினர்களின் வீடுகளுக்கு சென்று தங்கியுள்ளதாக தெரிவித்தார் .

இந்த கடல் நீர் உட்புகுந்ததால் எதுவித இழப்புகளும் ,பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார் .