மட்டக்களப்புக்கு இம்முறை தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் எவ்வாறு வழங்கப்படும்.??

(சசி துறையூர்) மட்டக்களப்புக்கு முஸ்லிம் பிரதிநிதித்துவம் எவ்வாறு வழங்கப்படும்.

எதிர்வரும் டிசம்பர் 18ம் திகதி நான்காவது இளைஞர் பாராளுமன்றத்திற்க்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இரு இனங்கள் வாழ்கின்ற மாவட்டத்தில்  உறுப்பினர்கள் மூவரும் தமிழ் இளைஞர்களாகவே தெரிவு செய்யப்படுவதற்க்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்படுவதற்க்கான வாய்ப்பு அரிதாகவே உள்ளது.

நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களுக்கான அறிவூட்டல் நிகழ்வொன்று 10.12.2016 சனிக்கிழமை பி.ப 02.00 மணியளவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் காரியாலய மண்டபத்தில் உதவிப்பணிப்பாளர் ஜனாப் MLMN. நைறூஸ் தலைமையில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் வேட்பாளர்கள் உட்பட கிழக்கு மாகாணப் பணிப்பாளர்,  மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மற்றும், பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது வேட்பாளர்கள் தமது சந்தேகங்களை அதிகாரிகளிடம் கேட்டு தெளிந்தனர். அந்த வகையில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதி காத்தான் குடி பிரதேச வேட்பாளர் ஒருவர் இம்முறை தேர்தல் கடந்த முறை போன்று தொகுதிவாரியாக இடம் பெறுவதனால் நான்கு முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் ஒரு பிரதிநிதியேனும் தெரிவுசெய்யப்பட வாய்ப்பில்லாது உள்ளது, கடந்த தேர்தல் இதற்க்கு நல்ல உதாரணம்.  முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியாதா? எனவும் முஸ்லிம் இளைஞர்கள் தேர்தலை புறக்கணிக்ககூடும் என தனது வினாவை தெடுத்தார்.

அதற்க்கு பதிலளித்த கிழக்கு மாகாண பணிப்பாளர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மூன்று பிரதிநிதிகளே தெரிவு செய்யப்படுவர் போனஸ் ஆசனங்கள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. இருந்த போதும் வாக்கொடுப்பில் முஸ்லிம் பிரதிநி ஒருவர் தெரிவு செய்யப்படாத பட்சத்தில் மேலதிக ஒரு ஆசனத்தை வழங்குவதற்க்கு எமது பணிப்பாளர் நாயகம் தலைவர் சட்டத்தரணி எறந்த வெலியங்கே அவர்கள் உத்தரவாதம் வழங்கியுள்ளார். ஆனால் இந்த ஆசனம் வழங்கப்படுவதற்கு முஸ்லிம் பிரதேசங்களில் அதிகளவான வாக்குப்பதிவு இடம் பெற்று அந்த பிரதேசத்திலோ தொகுதியிலோ கூடிய வாக்குககளை பெறுகின்றவர்க்கே அந்த ஆசனம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நான்கு முஸ்லிம் பிரதேசங்களில் இரண்டு (வாழைச்சேனை மத்தி, ஓட்டமாவடி) பிரிவுகள் கல்குடா தேர்தல் தொகுதிக்குள்ளும், ஏனைய இரண்டு பிரதேசங்களும் (காத்தான்குடி, ஏறாவூர் நகர்) மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்குள்ளும் அடங்குகின்றன இந்த இரண்டு பிரிவுகளுக்குள்ளும் தமிழ் இளைஞர்களின் வாக்குகள் அதிகளவாக உள்ளன எனவேதான் தேர்தல் மூலம் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பெறப்படுவதில் சற்று சிக்கலாண நிலை காணப்படுகிறது.

இந்த நிலைமை தொடர்பாக இளைஞர்கள்  கிழக்கு மாகாண முதலமைச்சர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் கவனத்திட்கும் கொண்டு  வந்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.