மட்டக்களப்பு மங்களாராம விகாரதிபதி மீண்டும் எமது இளைஞர் சமூகத்தை எங்கு அழைத்து செல்ல விரும்புகிறார்.

(சசி துறையூர்) 

எமது நாட்டில் மீண்டும் இன வாதத்தினை தூண்டும் வகையிலே மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரரின் செயற்பாடுகள் அமைகின்றது என மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் த. சசிகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இளைஞர்கள் நிதானமாக சிந்தித்து செயற்படவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்று சனிக்கிழமை விடுத்துள்ள  தனது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக இந்த நாட்டில் ஓடிய இரத்த ஆறு கற்றுத்தந்த பாடம் போதாதா? இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் இழந்தவை ஏராளம் இனி இழப்பதற்கு எதுவுமில்லை. இவ்வாறான நிலையில் இன்று இனவாதம் தலை தூக்குகிறது.  இவர்கள் கொழுத்தி விடுவார்கள்  இரையாகுவது எமது இளைஞர்களே. இளைஞர்களே !நிதானமாக சிந்தித்து செயற்படவேண்டும். எமது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பாரிய சதித்திட்டங்கள் சூட்சுமமாக முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கு நாம் பலிக்கடாவாக கூடாது.

  கடந்த கால யுத்த சூழல் எமது நாட்டின் ஒட்டு மொத்த அபிவிருத்தியினையும் படு பாதாளத்துக்கு பின் கொண்டு சென்றுள்ளது. நாம் எப்போது அதிலிருந்து மீண்டு வருவது.

நல்லாட்சி அரசினை ஏற்படுத்துவதில் பிரதான பங்காளர்கள் வட கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்களே, ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கம் இன்னும் எம் மக்களிடையே நம்பிக்கையினை ஏற்படுத்தும் வெளிப்பாடுகள் எதனையும் வெளிக்காட்டவில்லை. இவ்வாறான இனவாத செயற்பாடுகளை கண்டுகொள்வதாகவுமில்லை. ஆனாலும் நாம் நம்பிக்கையோடு பொறுமைகாக்க வேண்டியுள்ளது.

 கௌதம புத்தரின் போதனைகளை மக்களுக்கு போதித்து மானிட சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிகாட்ட வேண்டிய கௌரவத்துக்கும் மரியாதைக்குமுரிய ஒர் துறவி தமிழ் மக்களினுடைய பாரம்பரியத்தை முற்றாக கருவறுக்கும் காரியங்களையே செய்துவருகிறார். இது பௌத்த தருமத்துக்கு மாத்திரமின்றி மனித சமூகத்துக்குமோ இழுக்காகும்.

 அரசமரம் இருக்குமிடமெல்லாம் புத்தர்சிலையும் விகாரையும் அமைக்க வேண்டுமென்றால் வேப்பமரம் ஆலமரம் உள்ள இடமெல்லாம் இந்து சிலைகளையும் விக்கிரங்களையும் அமைக்க வேண்டும் அப்படியானல் நாட்டின் மூலைமுடுக்கொல்லாம் இந்து ஆலயங்கள்தான் இருக்கும்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வது நிறுத்தப்பட வேண்டும், அதற்கு துணைபோகுன்ற அதிகாரிகள் அரசியல் வாதிகள் யாராயினும் தங்களது செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நல்லாட்சி தொடர வேண்டும் அதன்மூலம் எமது நாட்டில் இனமத பேதமற்ற அரசும் சமூகமும் கட்டியெழுப்பபட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.