தமிழ் பேசும் மக்களுக்கான பிரதேசம் உருவாகவேண்டும் -ஜனா

தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமானால் தமிழ் பேசும் மக்களுக்கான பிரதேசம் உருவாகவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்தார்.

பிரதமரின் கொள்கை திட்டமிடல் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கோப் 2016 நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இளைஞர் முகாமின் இறுதி நிகழ்வு நேற்று புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பயிற்சி முகாமில் இளைஞர்களின் ஆளுமை திறன் விருத்திக்கான விரிவுரைகள் நடத்தப்பட்டதுடன், தீப்பாசறை இசையும் இரசனையும் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது.பயிற்சிகளின் நிறைவில் முகாமில் கலந்து கொண்ட அனைத்து இளைஞர்யுவதிகளுக்கும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.

மண்முனைப்பற்று பிரதேச இளைஞர்சேவை அதிகாரி தர்மரெட்னம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர் எம்.என்.எம்.நைரூஸ், மண்முனைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர்,
இளைஞர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி என்பது மிகவும் அதிதியாவசியமானதாக இருக்கின்றது.இந்த காலகட்டத்தில் இளைஞர்கள் சகல விதத்திலும் சகல துறைகளிலும் தலைமைத்துவம் வழங்க கூடிய விதத்தில் இருக்கின்றார்கள்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 77 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமைக்க்பட்டபோது இளைஞர் கழகத்தில் விளையாட்டுத்துறைக்கு செயலாளராக இருந்துள்ளேன்.கடந்த காலத்தில் சிரமதானங்களை மட்டு இந்த இளைஞர்கழகங்கள் ஊடாக செய்துவந்தோம்.ஆனால் இன்று துடிப்பான நிலையில் பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் சமூதாயத்துடன் இணைந்து செயற்படும் வகையில் இளைஞர் கழகங்களு;கு பல்வேறு வேலைத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.ஆனால் வழங்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு அமைய அரசாங்கத்தினால் வரவு செலவுத்திட்டம் ஊடாக கூடுதலான நிதி ஒதுக்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும்.

இளைஞர் கழகங்களுக்கு வேலைத்திட்டங்கள் வழங்கப்படும்போது அதனை பூர்த்திசெய்வதற்கு அவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.அதற்காக அரசியல்வாதிகளும் உதவுகின்றனர்.எனினும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு பல்வேறு பகுதிகளிலும் இருந்து உதவிகள் கோரும் போது அனைவரது தேவையினையும் நிறைவேற்றமுடியாத காரணத்தினால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலையும் உள்ளது.

இளைஞர்கள் இவ்வாறான தலைமைத்துவ பயிற்சியில் பங்குகொள்ளும்போது சான்றிதழுக்காக அதனை பயன்படுத்தாமல் உங்களது எதிர்காலத்திற்கான பயிற்சியாக அதனை பயன்படுத்தவேண்டும்.சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் இந்தியாவில் அன்றைய காலகட்டத்தில் பத்து  இளைஞர்களை தாருங்கள் இந்தியாவினையே மாற்றிக்காட்டுவேன் என்று கூறியிருந்தார்.இந்த மண்முனைப்பற்றில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் இங்கு வந்துள்ளீர்கள்.நீங்கள் இந்த மண்முனைப்பற்றில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தமுடியும்.
இந்த நாள் தமிழ்கள் துக்கதினமாக அனுஸ்டித்துவரும் நிலையில் இந்த நாளில் நீங்கள் சான்றிதழ்களைப்பெறும்போது அது உங்கள் வாழ் நாளில் மறக்கமுடியாத நாளாக இருக்கும்.

ஒரு போராட்டத்தை சர்வதேசத்திற்கு கொண்டுசென்ற தலைவன் பிறந்தநாளும் ஒரு போராட்டத்தை நடாத்திய தலைவன் உயிர்நீர்த்த நாளும்இந்த இருதினங்களில் இடம்பெற்றுள்ளது.

வடகிழக்கில் உயிர்நீர்த்த நாளை அனுஸ்டிக்கும் இந்தவேளையில் வடகிழக்கில் வாழும் தமிழ் பேசும் சமூதாயத்தை ஒற்றுமையான திசையினை நோக்கிகொண்டுசெல்லவேண்டும். தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமானால் தமிழ் பேசும் மக்களுக்கான பிரதேசம் உருவாகவேண்டும்.
இந்த நாட்டில் பௌத்த மேலாதிக்கம் அதிகரித்துச்செல்கின்றது.கடந்த ஆட்சிக்காலத்தில் பொதுபலசேனாவை சேர்ந்தவர்களினால் முஸ்லிம் மக்களுக்கு பல்வேறு அட்டூழியங்கள் நடாத்தப்பட்டன.நாங்கள் ஏற்படுத்திய நல்லாட்சியலாவது நிம்மதியாக வாழ்வோம் என்று எண்ணினால் இனவாதிகள் சில பௌத்த துறவிகளை தூண்டிவிட்டு இந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

இன்று மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் இவ்வாறான பௌத்த துறவிகளின் அடாவடித்தனங்களை காணமுடிகின்றது.
எனவே இளைஞர்கள் இன்றை இளைஞர்கள் நாளை தலைவர்கள் என்று இல்லாமல் இன்றைய இளைஞர்கள் இன்றைய தலைவர்களாக வரவேண்டும்.அரசியலில் ஆர்வமுள்ளவர்கள் அரசியலுக்குள் வரவேண்டும்.

இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் போட்டியிடமுடியுமென்றால் ஏன் பிரதேச,மாகாணசபை தேர்தல்கள்,பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடமுடியாது.மக்களுக்கு சேவைசெய்யவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடும் தைரிமும் வரவேண்டும்.
இன்று இலங்கையில் உள்ள அநேகமான உயர்அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நோக்கமில்லை.தங்களது கதிரைகளை,பதவிகளை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடனேயே செயற்பட்டுவருகின்றனர்.

எதனைச்செய்தாலும் அது சமூதாயத்திற்கு பயனள்ளதாக அமையும் வகையில் செயற்படும் நற்பண்புள்ள சமூதாயத்தை இளைஞர்கள் கட்டியெழுப்பவேண்டும்.